கொரோனாவை காரணம் காட்டி இன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் மீண்டும் ரத்து தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை காரணம் காட்டி இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு மீண்டும் ரத்து செய்து அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 4 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய 4 நாட்கள் தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் இருந்தபோது கடந்த மே மற்றும் ஆகஸ்டு மாதம் கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.

ஆனால் தொற்று குறைந்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்தலாம் என்று தமிழக அரசே அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகளும் கிராமங்களில் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் கடைசி நேரத்தில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு திடீரென கொரோனாவை காரணம் காட்டி ரத்து செய்து விட்டது. இந்த நிலையில், குடியரசு தினமான இன்று தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று மீண்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கொரோனா  பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்களை 26ம் தேதி நடத்த வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அரசிடம் இருந்து மறு அறிவிப்புகள் வரும் வரையிலும், கிராம பஞ்சாயத்துகள், கிராம சபை கூட்டங்களை கூட்ட வேண்டாம் என்று தகுந்த உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த, பிரசாரம் செய்ய மற்றும் தியேட்டர், மால், பொழுதுபோக்கு பூங்கா, சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கெல்லாம் தினசரி பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் நிலை உள்ளது. இந்த நிலையில், கிராம சபை கூட்டம் நடத்தினால் கொரோனா தொற்று பரவும் என்று தமிழக அரசு கூறி ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

Related Stories: