புதிய வாக்காளர்களுக்கு ‘ஸ்பீட் போஸ்ட்’ மூலம் வாக்காளர் அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: நாடு முழுவதும் நேற்று தேசிய வாக்காளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற வாக்காளர் தின நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரவேற்றார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய வாக்காளர்களாக சுமார் 20 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. வழக்கமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த ஆண்டு, புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஸ்பீட் போஸ்ட் (விரைவு தபால்) மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* புதிய வாக்காளர் அட்டை பெற...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேலும் கூறுகையில், புதிதாக தானியங்கி எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் வைக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மற்றும் கார்டு தொலைந்தவர்கள், புதிய கார்டு தேவைப்படுபவர்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்களை அணுகலாம். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி, அந்த நம்பரை எந்திரத்தில் பதிந்தால் புதிய கார்டு கிடைக்கும்.எவ்வளவு கட்டணம் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் வாக்காளர் அட்டையை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். புதிதாக பெயர் சேர்ப்பவர்களும், www.nsvp.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள எந்திரம் மூலம் புதிய கார்டு பெறலாம்.’’என்றார்.

Related Stories: