தடையை மீறி போராட்டம்: விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னாட்பிளேசில் கும்பல்: பேரணிக்கு முயன்றதால் பரபரப்பு

புதுடெல்லி: எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னாட்பிளேசில் கும்பல் கூடி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் வழி மறித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னாட்பிளேஸ் ஏ மற்றும் பி பிளாக் இடைப்பட்ட பகுதியில் 25க்கும் அதிகமான நபர்கள் கும்பல் கூடி விவசாயிகளை ஆதரித்து கோஷங்கள் எழுப்புவதாக போலீசாருக்கு ஞாயிறன்று பிற்பகல் 3.15 மணிக்கு தகவல் கிடைத்தது. டெல்லி சலோ போராட்டம் மற்றும் பேரணிக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டதால், எல்லைகளிலேயே 2 மாதமாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக உள்ளூரில் கும்பல் திரண்டதால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே அங்கு விரைந்தனர்.கும்பலை பார்த்ததும், கிடைத்த தகவல் உண்மை தான் என தெரிந்து கொண்ட போலீசார், அவர்களை விசாரித்தனர். விவசாயிகளை ஆதரிக்கும் மற்றும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சிட்ட போஸ்டர் மற்றும் பதாகைகளை ஏந்திப் பிடித்து, பங்களா சாஹப் குருத்வார நோக்கி பேரணி புறப்படப் போவதாக கும்பலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக போலீசார் அறிவுறுத்தியும் அதனை பொருட்படுத்தாமல், பாபா காரக் சிங் மார்க் வழியாக பேரணியாக செல்ல கும்பல் முயன்றது. கன்னாட்பிளேஸ் பிகேஎஸ் சாலையில் சிவாஜி மைதானம் மெட்ரோ ஸ்டேஷன் அருகே போலீசார் அந்த கும்பலை மீண்டும் தடுத்து நிறுத்தி, சட்டம், ஒழுங்கு பிரச்னை உருவாக காரணமாக இருக்காதீர்கள் என அறிவுறுத்தி, 144 தடையுத்தரவு இருப்பதை நினைவுபடுத்தி கலையச் செய்தனர். அதையடுத்து கும்பல் கலைந்தது. குடியரசு தினத்தில் டெல்லியில் 100 கி.மீ தொலைவுக்கு நடைபெற உள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் என்ன நடக்குமோ என ஏற்கனவே திகிலடித்துள்ள போலீசாருக்கு, அதற்கு முன்னதாக நகரின் முக்கிய பகுதியான கன்னாட்பிளேசில் கும்பல் கூடி விவசாயிகள் ஆதரவு கோஷங்களை எழுப்பியது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அறிவுறுத்தலுக்குப் பின், கும்பல் அமைதியாக கலைந்ததை அடுத்து போலீசார் நிம்மதி அடைந்தனர்.

தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள்

டிராக்டர் அணிவகுப்புக்கு முன்னதாக நேற்று விவசாயிகள்  தங்கள் கடைசி நிமிட தயாரிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். செவ்வாய்க்கிழமை நடைபெறும் அணிவகுப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, டிராக்டர்களின் பின்னால் செல்லும் டிராலியாகும். இந்த டிராலி முழுவதும்  சீக்கியர்களின் குருவான கிரந்த் சாஹிப்பின் புனித உரை குறித்து சுவரோட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் அவற்றை சுமந்து செல்லும். இந்த முழு வாகனமும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், சீக்கிய தலைவர்களான ஷாஹீத் பாபா தீப் சிங், பாபா பண்டா சிங் பகதூர் மற்றும் குரு தேக் பகதூர் ஆகியோரின் சுவரொட்டிகளும் டிராலியின் பக்காவட்டுகளில் ஒட்டப்பட்டுள்ளன.இதுபற்றி  தன்னார்வலர் ஜர்னைல் சிங் என்பவர் தெரிவிக்கையில், ”டிராக்டர் பேரணி எங்கள் புனித நூலால் வழிநடத்தப்படும். நாங்கள்  பேரணியின் போது பிரசாதங்களையும் வழங்குவோம். அப்போது  பக்தர்கள் மரியாதை செலுத்தலாம். புனித வாகனத்தின் பின்னால் மக்கள் நடந்தவாறு செல்வார்கள். அதன் பிறகு டிராக்டர்கள் அணிவகுத்து வரும்” என்றார்.

ஆனந்த் விஹார் பஸ்முனையம் இன்று மூடப்படுகிறது

டெல்லியில் இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துகிறார்கள். இதுமுன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் ஆனந்த்விஹாரில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான பஸ் முனையமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனந்த் விஹார் பஸ் முனையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் சாராய் காலேகான் முனையத்திற்கு திருப்பி அனுப்பப்படும் என்று டெல்லி பஸ்போக்குவரத்து சிறப்பு கமிஷனர் கே.கே தாகியா அறிவித்துள்ளார். ஆனந்த்விஹார் பஸ்முனையம் காசிப்பூர் எல்லையில் உள்ளது. டெல்லி மற்றும் உபியை இணைக்கும் பகுதி இது. எனவே இங்குள்ள பஸ் முனையம் மூடப்பட்டுள்ளது.

பட்ஜெட் நாளன்றும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் போது, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்காக, குடியரசு தின விழா டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள டெல்லி வந்துள்ள விவசாயிகள் திரும்பி செல்லாமல், நாடாளுமன்ற பேரணியில் பங்கேற்பதற்காக இங்கேயே தங்கி விடுவார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், பல்வேறு விதமான பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Related Stories: