டெல்லி மக்களிடம் ஆன்டிபாடீஸ் அதிகரிப்பு

புதுடெல்லி: வைரசை முறியடிக்கும் ஆன்டிபாடிஸ் டெல்லி வாசிகளின் உடலில் அதிகரிப்பதை செரோ ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் டெல்லியை கடந்த ஜூன் மாதம் உச்சகட்டத்தில் ஆட்டிப் படைத்தது. வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க உலகின் பல்வேறு மருந்து நிறுவனங்களும் அயராது பாடுபட்ட அதே நேரத்தில், வைரஸ் பாதித்த நபர்களுக்கு செரோ ஆய்வு நடத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதா என கண்டறிய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்தது. அதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெற்று, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் ஜூன் 27 தொடங்கி ஜூலை 10ம் தேதி வரை டெல்லியில் முதல் செரோ ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 21,387 பேரை சோதனை செய்ததில், கொரோனா வைரசை பூண்டோடு ஒழித்து கட்டும் நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் 23 சதவீதத்தினருக்கு அதிகரிப்பு ஆகியிருப்பது தெரிய வந்தது.

கொரோனா பாதிப்பு மக்களிடம் இருந்து தொற்று பிறருக்கு பரவுவதை தவிர்க்க, ஆன்ட்டிபாடீஸ் அதிகரிப்பு உள்ளவர்கள் ஒரு அரணாக இருப்பார்கள் என அரசு உறுதியாக நம்பியதால், டெல்லியின் அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு நீங்கிய நபர்களில் குறிப்பிட்ட பலரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் செரோ ஆய்வு நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறினார். அதன்படி நடத்தப்பட்ட ஆகஸ்ட் மாத செரோ ஆய்வு முடிவுகளில் 29.1 சதவீதம், செப்டம்பர், அக்டோபர் மாத முடிவுகளில் உத்தேசமாக தலா 25 சதவீதம் உடலில் ஆன்டிபாடீஸ் அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படி 5வது முறையாக 25,000 பேரிடம் சமீபத்தில் மேற்கொண்ட செரோ ஆய்வின் முடிவறிக்கை தற்போது தயாராகி உள்ளது. அதில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் ஆன்டிபாடீஸ் 50 முதல் 60 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மாவட்டத்தின் பெயர் குறிப்பிடாமல் சுகாதார துறை அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். சதவீதம் அதிகரிப்பு இருப்பது டெல்லிவாசிகளின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பையும், வைரசின் தாக்கம் டெல்லியில் குறைந்து வருவதையும் உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

Related Stories: