வாக்களிக்க வேண்டியது பொதுமக்களின் ஜனநாயக கடமை: வாக்காளர் தின நிகழ்ச்சியில் நீதிபதி தயானந்தா வலியுறுத்தல்

தங்கவயல்: தேர்தலின் போது வாக்களிக்க வேண்டியது பொதுமக்களின் உரிமை மட்டுமல்ல, தவறாமல் வாக்களிக்க வேண்டிய ஜனநாயக கடமையும் உண்டு என்று தங்கவயல் நீதிமன்ற நீதிபதி தயானந்தா வலியுறுத்தி பேசினார்.

 தங்கவயல் நகரசபை சார்பில், தங்கவயல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அரங்கில் தேசிய வாக்காளர்கள் தினம் நேற்று நகரசபை கமிஷனர் சர்வர் மெர்ச்சன்ட் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது. இதில் தங்கவயல் நீதிமன்ற நீதிபதி தயானந்தா நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும் போது, மக்கள் பிரதிநிதிகளை வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமையை பொது மக்களுக்கு இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ளது. அதை பொது மக்கள் தவறாமல் பயன் படுத்தி நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக அடிப்படை வசதிகளை பெற்று வாழும் நகர புற மக்களை விட கிராமப்புற மக்களே அதிக அளவில் வாக்களிக்கின்றனர். பெரும்பாலானோர் தேர்தல் அன்று ஒரு விடுமுறை தினமாக பாவித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறி விடுகின்றனர்.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை, வீணாக்காமல், கட்டாயம் வாக்குரிமையை எந்த பிரதிபலனும் இன்றி பயன்படுத்தி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், நீதிபதிகள் கிரண், ரூபா, மகேஷ் பாட்டீல், முக்தார் அகமது, மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நாகராஜ், செயலாளர் ஜோதி பாசு, அரசு ஊழியர் சங்க தலைவர் ரவி ரெட்டி, வழக்கறிஞர்கள் அசோகன், மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: