×

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியிலிருந்து மோடி அரசு சம்பாதித்த ரூ.20 லட்சம் கோடி எங்கே?.. காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கேள்வி

புதுடெல்லி: கடந்த ஆறு ஆண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியிலிருந்து மோடி அரசு சம்பாதித்த சுமார் ரூ.20 லட்சம் கோடி எங்கே? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கன் கூறுகையில், ‘சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிந்த போதிலும், மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்துகிறது. இவ்வாறு உயர்த்தப்படுவதால் விவசாயிகள், பொது மக்கள் மற்றும் போக்குவரத்து துறையில் உள்ளவர்கள் நேரடியாக பாதிக்கின்றனர். நாட்டின் பணவீக்கம் உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மே 26, 2014 அன்று, பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.

அந்த நேரத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை ஒரு பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.51 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.57.28 ஆகவும், எல்பிஜி (சமையல் காஸ்) சிலிண்டர் ரூ.414 ஆகவும் இருந்தது. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை ஜனவரி 22, 2021 அன்று ஒரு பீப்பாய்க்கு 55.52 அமெரிக்க டாலராக இருந்தது. இருப்பினும், டெல்லியில், பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.85.70 ஆகவும், டீசல் ரூ .75.88 ஆகவும் உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.37.78 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.28.37 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதாவது, பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் உயர்த்தி உள்ளது. இந்த ஆறு ஆண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியிலிருந்து மத்திய அரசு சுமார் ரூ.20 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ரூ.441-க்கு கிடைத்தது. இன்று, அதே சிலிண்டர் டெல்லியில் ரூ.694க்கு கிடைக்கிறது. எரிவாயு மானியங்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, குடும்பங்களின் பட்ஜெட்டும் சரிந்துவிட்டது. எனவே, உயர்த்திய கலால் வரியை மோடி அரசு திரும்பப் பெற்றால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.88 ஆகவும்,

டீசல் விலை ரூ .47.51 ஆகவும் கிடைக்கும். ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணப்பயன்கள் குறைக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர்கள் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலையின்மை அதிகரித்துள்ளது. இருப்பினும், மோடி அரசாங்கம் தனது பணக்கார நண்பர்களுக்கு பயனளிக்கும் திட்டத்தை வழங்கி, ஏழைகளிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கிறது’ என்றார்.


Tags : government ,Modi ,Ajay McCann ,Congress , Where is the Rs 20 lakh crore earned by the Modi government from excise duty on petrol and diesel? .. Senior Congress leader Ajay McCann Question
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...