×

ஆடையணிந்த பெண் ஒருவரை தொடுதல், தடவுதல் பாலியல் குற்றமல்ல!: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை: ஆடையணிந்த பெண் ஒருவரை தொடுதல், தடவுதல் போன்றவை பாலியல் குற்றம் இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரின் வழக்கு விசாரணை, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு முன் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த தீர்ப்பில், ‘பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைக்கும் ஒருவர், எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொட்டு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என்று கருதப்படும்.

அதேநேரத்தில், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு ெகாடுத்தால் அது பாலியல் வன்முறையாகாது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடைகளை அகற்றாமல், சிறுமியின் உடல் பாகங்களை ஆடைக்கு மேல்  தொட்டால் அது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. போக்சோ சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் ரீதியிலான நோக்கத்துடன் சிறுமியின் தனிப்பட்ட அந்தரங்க பகுதியை தொடுதல், தாக்குதல் நடத்துதல்  அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் அந்தரங்க உறுப்புகளை தொட வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது.

பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரை அவரது விருப்பம் இல்லாமல் அத்துமீறி தொடுவதை தடவுதல் என்று கூறலாம். இந்த தடவுதல் செயலானது பாலியல் குற்றமில்லை’ என்று கூறியுள்ளார். பாலியல் தொடர்பான வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்ற கருத்து இருக்கும் நிலையில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பிலும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Mumbai iCourt , Touching and touching a dressed woman is not a sexual offense !: Mumbai iCourt verdict
× RELATED ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ....