×

டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது: பிப்.1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி...விவசாய சங்கங்கள் அறிவிப்பு.!!!

டெல்லி: வரும் பிப்ரவரி 1- ம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட கோரி மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதற்கிடையே, புதிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நாளை ஜனவரி 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் தலைநகர் டெல்லி சென்று பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கிரந்திகாரி கிசான் யூனியன் விவசாய சங்க பிரதிநிதி தர்ஷன் பால், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி வெவ்வேறு இடங்களில் பேரணி நடத்தவுள்ளதாக தெரிவித்தார். டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி, தனது 3வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : tractor rally ,Rally ,parliament ,unions , Struggle with tractor rally will not end: Rally towards the parliament on Feb.1 ... Agricultural unions announce. !!!
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி