×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்; தமிழகத்தில் நல்லாட்சி அமைத்துத் தருவது எனது கடமை: ராகுல் காந்தி பேட்டி

கரூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்; திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்கிறது என அரவக்குறிச்சியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.

அதன்படி, ராகுல்காந்தி எம்.பி. நேற்று முன்தினம் கோவை வந்து பிரசாரத்தை தொடங்கினார். அந்த வகையில் 3-ம் நாளான இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அரவக்குறிச்சி பகுதியில் பேசிய ராகுல்; தமிழகத்தில் நல்லாட்சி அமைத்துத் தருவது எனது கடமை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்; திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்கிறது. கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிக்கிறார்கள்; அதை தடுக்கவே இங்கு வந்துள்ளேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டிலிருந்து ஆர்எஸ்எஸ்-ஐ துடைத்து எரிய வேண்டும்.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்துக்கு பிரதமர் மோடி எதிராக உள்ளார். தமிழ்நாட்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி நாட்டின் பன்முகத்துவத்தை தகர்த்து வெறுப்பை பரப்புகிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி பாழாக்கி விட்டார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டார் மோடி. பால்கோட் தாக்குதல் பற்றி ஒரு செய்தியாளருக்கு தெரிவித்தது யார்? பிரதமர், ராணுவ அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகருக்கு மட்டுமே தெரிந்தது அர்னாபுக்கு எப்படி தெரிந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : MK Stalin ,DMK ,chief ministerial candidate ,Rahul Gandhi ,Tamil Nadu , We accept DMK leader MK Stalin as chief ministerial candidate; It is my duty to establish good governance in Tamil Nadu: Interview with Rahul Gandhi
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...