விவசாயிகள் டிராக்டர் பேரணி: ஜன.26-ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியை தேர்வு செய்திருக்கலாம்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர் பேட்டி.!!!

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் விரைவில் முடிவடையும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட கோரி மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதற்கிடையே, புதிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நாளை ஜனவரி 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் தலைநகர் டெல்லி சென்று பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் ஜனவரி 26-ம் தேதிக்கு பதிலாக வேறு எந்த நாளையும் தேர்வு செய்திருக்கலாம், ஆனால் அவர்கள் இப்போது அறிவித்துள்ளனர். எந்தவொரு விபத்தும் இல்லாமல் அமைதியாக பேரணியை நடத்துவது விவசாயிகளுக்கும் காவல்துறை நிர்வாகத்திற்கும் கவலையாக இருக்கும் என்றார்.

விவசாயிகளின் போராட்டம் எப்போது முடிவடையும் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டம் விரைவில் முடிவடையும் என்றார். அவர்கள் உடன்படவில்லை என்றால் எவரும் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம். பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், மேலும், பிரச்சினை தீர்க்கப்படும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம் என்றார்.

Related Stories: