தவறான ஊசி செலுத்தியதால் இளைஞர் உயிரிழப்பு!: தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு சீல் வைத்து சுகாதாரத்துறை நடவடிக்கை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கூட்டுறவு மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு தவறான ஊசி செலுத்தியதால் அந்த இளைஞர் மரணமடைந்துள்ளார். புகார் தொடர்பாக கூட்டுறவு மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் கூட்டுறவு மருத்துவமனை உள்ளது. தமிழகத்திலேயே கூட்டுறவு முறையில் நடத்தப்படும் ஒரே ஒரு மருத்துவமனை இதுவே. குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அதன்படி, கடந்த 21ம் தேதி தளவாய்புரத்தை சேர்ந்த முகேஷ் என்ற 23 வயது இளைஞர், காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்றுள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் செவிலியர்கள் முகேஷுக்கு சிகிச்சை அளித்து ஊசி செலுத்தியுள்ளனர். தொடர்ந்து முகேஷுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு அங்கேயே வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர் மீண்டும் ஒரு ஊசி செலுத்தியுள்ளார். இதிலும் சரியாகாத காரணத்தினால் உடனடியாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்து செல்லும் போது வழியிலேயே முகேஷ் உயிரிழந்துள்ளார். திருமணமான 1 மாதத்தில் முகேஷ் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கூட்டுறவு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்ககோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் பேரில் இன்று காலை மருத்துவமனைக்கு வருகை தந்த விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன், சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அனைவரையும் வெளியேற்றி மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி இறந்து விட்டதால் அதன் அடிப்படையில் தரப்பட்ட புகாரின் பேரில் விருதுநகர் மாவட்டம் சுகாதார இணை இயக்குநர் நேரில் ஆய்வு செய்த போது, இந்த மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவமனை கட்டுப்பாட்டின் கீழ் பதிவுசெய்யப்படாதது என தெரிய வருகிறது. அதன் அடிப்படையிலும், மேலும் போலி மருத்துவர்களை தடை செய்யும் பொருட்டும் இந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: