எடப்பாடி பழனிசாமியை இயக்கும் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை இயக்க முடியாது : கரூரில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை

கரூர்: எடப்பாடி பழனிசாமி அரசை ரிமோட் கண்ட்ரோல் கொண்டு இயக்கம் பிரதமர் மோடியால் தமிழகத்தையும், தமிழக மக்களையும் இயக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.

அதன்படி, ராகுல்காந்தி எம்.பி. நேற்று முன்தினம் கோவை வந்து பிரசாரத்தை தொடங்கினார். அந்த வகையில் 3-ம் நாளான இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்றைய நாளை போலவே இன்றும் எளிமையாக வந்திருந்த ராகுல்; காரின் மேல் பகுதியில் அமர்ந்து உரையாற்றினார். அவரது பேச்சை காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி; எடப்பாடி அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக மோடி இயக்குவதாக விமர்சனம் செய்தார். ஆனால் தங்களை இயக்க நினைக்கும் மோடியின் ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பேட்டரியை தமிழக மக்கள் கழற்றி வீசுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் ஊழல் சாம்ராஜ்யம் மோடியிடம் அடிமைப்பட்டு கிடப்பதாக கூறிய ராகுல்காந்தி, எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டி வைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; இந்திய பொருளாதாரத்தை குலைக்கவே பிரதமர் மோடி ஜிஎஸ்டி கொண்டு வந்தார். 5 முதலாளிகளுக்கு ஆதரவாகவே அவர்  செயல்பட்டு வருகிறார். அவரது இந்த நடவடிக்கையால்தான் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மோடி 3 கருப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டது. படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். இதற்கு காரணம் நாட்டை ஆளும் பிரதமர் மோடிதான். பாஜக, ஆர்எஸ்எஸ்சுக்கு தமிழக மக்களை பற்றி கவலை கிடையாது.

ஒரு தேசம், ஒரு மொழி என்பதில் மோடி என்ன சொல்ல வருகிறார்? ஏன் தமிழ்மொழி என்பது மொழி கிடையாதா? தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியாகும் என்பதை ஏன் நினைவில் கொள்ளவில்லை. மோடி, அதிமுகவையும், அமைச்சர்களையும், மிரட்டுகிறார். தமிழக அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் பயந்துவிட மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் மனதோடு பேசும் நிகழ்ச்சியை நடத்துகிறார். அதை யாரும் விரும்பி பார்ப்பதில்லை. சரியான அரசாங்கத்தை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: