திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இந்தியில் இருப்பதால் அதிர்ச்சி!: தமிழில் மாற்ற தி.மு.க-வினர் மனு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் சில  இந்தி, ஆங்கிலத்தில் இருப்பதால் வாக்காளர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்திருக்கின்றனர். இதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 20ம் தேதி புதிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய சட்டமன்றத்தில் உள்ள வாக்காளர்கள் சிலரின் பெயர்கள் இந்தியில் அச்சிடப்பட்டுள்ளது. திமுக-வினர் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கும் போது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாவட்ட கழக துணைச்செயலாளர் நாகராஜ் தலைமையிலான திமுக-வினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மனுவில், தமிழ், ஆங்கிலம், இந்தி என கலந்து வாக்காளர் பட்டியல் இருக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வாக்காளர் பட்டியலில் இந்தியில் உள்ள பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இறந்தவர்களின் பெயர் நீக்காமலும், ஒரே நபரின் பெயர்கள் 2, 3 முறை வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் திமுக-வினர் புகார் தெரிவித்தனர். இந்த புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: