தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்!: நாவல்னி கைது சர்ச்சையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை..!!

மாஸ்கோ: தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாகவும், அரசுக்கு எதிராக மக்களை போராட தூண்டும் வகையில்  நடந்துகொள்வதாகவும், ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவில் கைதாகி உள்ள அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னியை விடுவிக்கக்கோரி அந்நாடு எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய மக்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதையும், கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கும் அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக அந்நாட்டு தூதர் ரெபிக்கா ரூஸ் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தி தொடர்பாளர் எஸ்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி ரஷ்யாவின் பல பகுதிகளில் வெடித்துள்ள போராட்டம், தீவிரமடைந்துள்ளது. சுமார் 3,500 பேரை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டங்களில் பங்கேற்பவர்கள் கைது செய்யப்பட்டு காலவரம்பின்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என ரஷ்ய காவல்துறை எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி, கடந்த ஆகஸ்ட் மாதம் திடீர் சுகவீனம் அடைந்தார். நாவல்னியை கொல்ல உணவில் ரஷ்ய அரசு விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இச்சூழலில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்த நாவல்னி, கடந்த வாரம் ரஷ்யா திரும்பினார். நாவல்னி மீது உள்ள பழைய வழக்குகளுக்காக அவரை கைது செய்து ரஷ்யா அரசு சிறையில் அடைத்தது. விளாடிமிர் புதினை பலவீனப்படுத்த அமெரிக்கா அரங்கேற்றும் முயற்சியின் ஒரு அங்கம் தான் அலெக்ஸி நாவல்னி என ரஷ்ய அரசு கூறிவருகிறது. மேலும் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில்  அமெரிக்கா தேவையின்றி தலையிட வேண்டாம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Related Stories:

>