புதுச்சேரியில் இருந்து காரில் பாக்கெட் சாராயம் கடத்திய அமமுக நிர்வாகி கைது

நாகை : புதுச்சேரியில் இருந்து நாகை வழியாக திருவாரூருக்கு பாக்கெட் சாராயம் கடத்தியதாக அமமுக நிர்வாகியை போலீசார் நேற்று கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் இருந்து நாகை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு காரில் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயம் கடத்தப்படுவதாக நாகை மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் பழனிவேலு, பாலமுருகன், குபேந்திரன் ஆகியோர் கங்களாஞ்சேரி ரயில்வே கேட் பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக காரில் வந்தவரிடம் மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தியதில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதியை சேர்ந்த சர்புதீன் (48)என்பதும், காரைக்கால் மாவட்டம் அமமுகவை சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்பதும், துளிர் என்ற பெயரில் அறக்கட்டளை வைத்திருப்பதும், திருவாரூர் கங்களாஞ்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் போன் மூலம் தகவல் தெரிவித்து புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை கடத்தி வரும்படி கூறியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆயிரம் பாக்கெட்டுகளில் இருந்த 144 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சர்புதீனை கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வரும்படி கூறிய திருவாரூரை சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: