விவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்தி பணக்காரர்களை வாழ வைக்கிறது மோடி அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஈரோடு: விவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்திக்கொண்டு 5 சதவீத பணக்காரர்களை மோடி அரசு வாழ வைக்கிறது என்று நெசவாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசினார். தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரசாரம் தொடங்கியுள்ளார். அவர் நேற்று முன்தினம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். நேற்று அவர் 2ம் நாளாக திருப்பூர் மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் பிரசாரம் செய்தார்.  ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அங்கு நடந்த நெசவாளர் சந்திப்பு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: சீனா ராணுவம் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. ஜவுளித்தொழிலில் பங்களாதேஷ், இந்தியாவுக்கு போட்டியாக இருந்து வருகிறது. இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பு செய்யும் அளவுக்கு சீனாவுக்கு எப்படி தைரியம் வந்தது என்றால், நமது இந்திய நாடு மிகவும் பலவீனமாக உள்ளதை தெரிந்து வைத்துள்ளனர். நமது நாட்டின் பிரதமர் மோடி சீனாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி உள்ளது என்று சீனாவுக்கு நன்கு தெரியும். நாட்டில் உள்ள 95 சதவீத மக்களான விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்களை பலவீனப்படுத்திக்கொண்டு 5 சதவீத பணக்காரர்களை மோடி அரசு வாழ வைக்கிறது.

இந்தியாவில் விவசாயிகள், சிறு, குறு முதலீட்டாளர்கள் தன்னிறைவு பெறும் பட்சத்தில் சீனா அதிபர்கூட இந்திய தயாரிப்பு துணிகளையும், கார்களையும் பயன்படுத்துவார். ஆனால் மத்திய அரசு 5 தொழில் அதிபர்களுக்காக மட்டுமே பாடுபடுகிறது. மோடி அரசு தொழிலாளர்களின் மீதான முதல் தாக்குதல் என்பது பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எந்த ஏழையும் தொழில் செய்யக்கூடாது என்பதுதான். அடுத்த கட்டமாக நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. கொரோனா காலத்தில் பா.ஜ. அரசு மிகப்பெரிய தொழிலதிபர்களின் பல ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

ஆனால் விவசாயிகள், நெசவாளர்கள், ஏழைகளின் ஒரு சதவீத கடன்கள்கூட தள்ளுபடி செய்யப்படவில்லை. நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து. இது நம்முடைய நாடு. நெசவாளர்கள் மிகவும் கஷ்டமாக உள்ளீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நிறைய நபர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நெசவாளர்களை முழுமையாக பாதுகாக்க வேண்டிய திட்டத்தை தயாரிக்க உள்ளோம். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். அரச்சலூரில் ராகுல் பேச்சை மொழிபெயர்த்த கோபியை சேர்ந்த தொழிலதிபர் முகமது இம்ரான் திடீரென்று மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்தார்.

அவரை கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஊத்துக்குளியில் இருந்து பெருந்துறை வந்த ராகுல்காந்தி அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே மகிளா காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், ஈ.வி.கே. சம்பத் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பன்னீர்செல்வம் பார்க்கில் அமைந்துள்ள தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டோர் தமிழ் பாரம்பரியம், பண்பாட்டுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பினை கொடுக்க தவறிவிட்டனர். அவர்களுக்கு அதை பற்றிய புரிதலும் இல்லை. தமிழக மக்கள் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். அதிகாரத்தால் அவர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. அன்பு, மரியாதையுடன் தமிழக மக்களிடம் பழகினால் அவர்களும் திரும்ப அதே அன்பு, மரியாதையை கொடுப்பார்கள். இதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாடு என்பது பல மொழிகளையும், சாதிகளையும், மதங்களையும், பண்பாடுகளையும் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். இதுதான் இந்தியாவின் பலம். ஆனால் இதை மாற்ற மோடி அரசு முயற்சித்து வருகிறது. நாட்டில் விவசாயத்தை அழித்துவிட்டார்கள். டெல்லி செங்கோட்டையில் குடியரசு தினத்தன்று ராணுவ அணிவகுப்பு நடப்பதுதான் வழக்கம். ஆனால் முதன்முறையாக விவசாயிகள் பேரணி நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

அவல்பூந்துறையில் ராகுல்காந்தி பேசியதாவது: டெல்லியில்  இருக்கும் மோடி, இந்த அரசையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். அவரது ஆதரவுடன் மோசமான ஆட்சி நடக்கிறது. அவர் செயல்படுத்த விரும்பும் திட்டங்களை, தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு  நிறைவேற்றுவதால், இந்த அரசை அகற்ற வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.

* தமிழர்களை ஏமாற்ற முடியாது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் ராகுல் காந்தி பேசுகையில், தமிழில் பேசுவதால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என மத்தியில் ஆளுபவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். நான் தமிழகத்தில் பிறக்கவில்லை. ஆனால், தமிழ் மொழிக்கான மதிப்பை நன்கு அறிவேன். ஆனால், மத்தியில் ஆளும் மோடிக்கோ, பா.ஜ.வினருக்கோ இது தெரியாது. தமிழக மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டு மோடி வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ளது. வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் வளம் பெறாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களை ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவை நசுக்குகிறது. என்றார்.

* கைத்தறி நெசவு நெய்த ராகுல்காந்தி

அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலையில் நடைபெற்ற நெசவாளர் சந்திப்பு கூட்டத்திற்கு பிறகு அங்கு இருந்த கைத்தறியில் தேசியக்கொடியை ராகுல்காந்தி நெசவு செய்ததோடு, நெசவு பணியில் இருந்த பெண்ணிடம் கைத்தறி நெசவு குறித்தும், நாள் ஒன்றுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்றும் கேட்டறிந்தார். கூட்டத்தில் நெசவாளர்கள் சார்பில் ராகுலின் சகோதரி பிரியங்காவுக்கு சேலை பரிசாக வழங்கப்பட்டது. கூட்டம் நிறைவடைந்த பின் அங்கிருந்த நெசவாளர்களுடன் அமர்ந்து ராகுல்காந்தி மதிய உணவு சாப்பிட்டார்.

Related Stories: