×

ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி, ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் இதுவரை முடியாமல் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். திருவொற்றியூர் - மணலி சாலையில், திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் அருகே பக்கிங்காம் கால்வாய் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து காணப்பட்டது. எனவே, இதை இடித்துவிட்டு, புதிய மேம்பாலம் கட்டித்தர வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், அந்த பகுதியில் ரூ.42 கோடி செலவில் இருவழி பாதையுடன் 530 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய மேம்பால பணி தொடங்கியது. 2018 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் இந்த மேம்பால பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது வரை இந்த பணி முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க கோரி, பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே உள்ள பழைய பாலத்தை அகற்றி, அந்த இடத்தில் புதிய மேம்பாலத்திற்கான தூண்களை அமைக்கும் பணிகளை தொடங்கினர்.

இதற்காக, திருவொற்றியூரில் இருந்து பேசின் சாலை வழியாக மேம்பால பணி நடைபெறும் பகுதியை கடந்து மணலிக்கு செல்லக்கூடிய பாதை மூடப்பட்டு, அதற்கு பதிலாக திருவொற்றியூர் மற்றும் ஐஓசிக்கு சென்று வரும் வாகனங்கள் கார்கில் நகர் பக்கிங்காம் கால்வாய் ஒட்டி உள்ள சாலையில் செல்ல மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் திருவொற்றியூரில் இருந்து மணலிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், ஒப்பந்த தேதி முடிந்து 2 ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை மேம்பால பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

விரைவில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன் இந்த மேம்பால கட்டுமான பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘2018ம் ஆண்டே முடிக்க திட்டமிடப்பட்ட இந்த மேம்பால பணியை அதிகாரிகள் இதுவரை முடிக்காமல், மெத்தனமாக செயல்படுகின்றனர். இதனால் திட்ட மதிப்பீடு தொகை கூடுதலாகி மக்களின் வரிப்பணம் விரயமாகிறது. மக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, முதல்வரோ அல்லது துணை முதல்வரோ இந்த மேம்பால பணியை நேரில் பார்வையிட்டு விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்,’’ என்றனர்.

* விபத்து அபாயம்
மேம்பால பணி நடைபெறுவதால் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ள மாற்றுச் சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் திருவொற்றியூர் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கொட்டி எரிப்பதால் புகை மூட்டம் சூழ்ந்து, வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு, பக்கிங்காம் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.

* ஆய்வு செய்யாத அதிகாரிகள்
இந்த மேம்பால பணியை ஒப்பந்தம் எடுத்த கட்டுமான நிறுவனம், தேவையான ஊழியர்களை வைத்து பணியை துரிதமாக மேற்கொள்ளாமல், குறைந்த தொழிலாளர்களை மட்டுமே வைத்து மந்தகதியில் பணியை செய்து வருகிறது. மேலும், இந்த கட்டுமானத்தில் எந்த நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. இதுவே பணி தாமதமாக நடைபெற காரணம். அமைச்சர், அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை ஒப்பந்த நிறுவனம் கொடுத்து விடுவதால், கட்டுமான பணி குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்வதில்லை. இதனாலேயே மேம்பால பணி முடிவடையாமல் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

Tags : 2 years after contract expires
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...