வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெரம்பூர்: சென்னையில் உள்ள  பெரும்பாலான காவல் நிலையங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை உயர் அதிகாரிகள் முறையாக வாங்கி தருவதில்லை என்றும், கணினி, பிரின்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் ஏதேனும் பழுதடைந்தால் அதை சரி செய்து தருவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வழக்கு சம்பந்தமான பணிகள் பாதிக்கப்படுவதுடன், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. சமீபத்தில், வியாசர்பாடி காவல் நிலைய குற்றப் பிரிவில் பிரின்டர் பழுதானதால், புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு சிஎஸ்ஆர் வழங்காமல் போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

கடந்த வெள்ளிக்கிழமை வியாசர்பாடியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், வியாசர்பாடி குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளர் சத்தியநாராயணனிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ‘‘தனது கிரெடிட் கார்டை சில விஷமிகள் தவறாக பயன்படுத்தி, அதிலிருந்து ரூ.11 ஆயிரம் எடுத்து விட்டனர். இதுகுறித்து வங்கியில் தெரிவித்தபோது அவர்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, 2 நாட்களுக்குள் எப்ஐஆர் நகல் வாங்கி வாருங்கள். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும், என கூறுகின்றனர். எனவே, எனது புகார் மீது வழக்கு பதிந்து, எப்ஐஆர் நகல் வழங்க வேண்டும்,’’ என தெரிவித்து இருந்தார்.

அப்போது உதவி ஆய்வாளர், ‘‘புகாரை டைப் செய்ய ஆளில்லை. நாளை வாருங்கள்,’’ என்று கூறியுள்ளார். அதன்படி, மறுநாள் சென்றபோது, குற்றப் பிரிவில் ஆள் இல்லாததால் சட்டம் ஒழுங்கு பிரிவில் சென்று சிஎஸ்ஆர் பெற்றுக் கொள்ளுங்கள்,’’ என கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு சென்றபோது, இங்கு ஏற்கனவே நிறைய சிஎஸ்ஆர் போட வேண்டி உள்ளது. அதனால், இப்போது முடியாது,’’ என கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண், ‘‘இன்று மாலைக்குள் எப்ஐஆர் நகலை வங்கியில் தர வேண்டும். இல்லை என்றால் எனது ரூ.11 ஆயிரத்தை திரும்ப பெற முடியாது. தயவு செய்து உதவி செய்யுங்கள்,’’ என்று கேட்டுள்ளார்.

அப்போது போலீசார், ‘‘இன்று மாலை வந்து பாருங்கள்,’’ என கூறியுள்ளனர். அதன்படி, மாலை சென்றபோது, ‘‘காவல் நிலையத்தில் உள்ள பிரின்டர் பழுதாகிவிட்டது. உங்களுக்கு தெரிந்த மெக்கானிக் இருந்தால், அவரை வரவழைத்து, பிரின்டரை சரி செய்து தாருங்கள். பிறகு சிஎஸ்ஆர் தருகிறோம்,’’ என தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், ‘‘ஆன்லைன் மூலம் புகாரை பதிவு செய்யுங்கள். நாங்கள் வெளியே சென்று பிரின்ட் எடுத்துக் கொள்கிறோம்,’’ எனக் கூறியுள்ளனர். அதன் பிறகு 4 மணி நேரம் அந்த பெண்ணை காவல் நிலையம் வெளியே காக்க வைத்த போலீசார், ‘‘நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள். சிறிது நேரத்தில் ஆன்லைனில் சிஎஸ்ஆர் பதிவேற்றம் செய்து விடுவோம்.

நீங்கள் பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்,’’ எனக்கூறி அனுப்பி உள்ளனர். ஆனால், அதன்படி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆன்லைனில் அவர்கள் பதிவேற்றம் செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘சர்வர் சரிவர வேலை செய்யவில்லை. நாளை வந்து பாருங்கள்,’’ என கூறியுள்ளனர். இதனால், நொந்துபோன அந்த பெண், இனிமேல் சிஎஸ்ஆரை கொண்டுபோய் வங்கியில் கொடுத்தாலும், பலனில்லை, என புலம்பி தவித்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘வியார்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி எந்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்வதில்லை. எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: