×

வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பு இல்லை அமைச்சர் செங்கோட்டையனை ஆசிரியர்கள் முற்றுகை

கோபி: 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கண்ணீருடன் மனு அளித்தனர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 4500க்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் 2013ம் ஆண்டில் நடந்தது.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு (மதிப்புகாண்) வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். ஆனால், தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், கடந்த ஏழு ஆண்டுகளாக பணி நியமனத்திற்காக காத்து உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதால், தனியார் பள்ளிகளிலும் வேலை கிடைக்காமல், வேறு பணிகளுக்கும் செல்ல முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கோபியில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சென்றனர். அவர்களை காவல்துறையினர் கோபி-சத்தி பிரதான சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து நம்பியூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களது கோரிக்கையை முதலமைச்சரிடம் கூறி பரிசீலனை செய்வதாக அமைச்சர் கூறினார்.

Tags : siege ,Minister ,Senkottaiyanai Teachers , No siege by weightage system Minister Senkottaiyanai Teachers siege
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...