சசிகலாவின் விடுதலையால் எந்த தாக்கமும் ஏற்படாது: வைகைச்செல்வன், அதிமுக மூத்த செய்தித்தொடர்பாளர்

ஏற்கனவே 4 வருடமாக ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பான முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வழிநடத்தி செல்கிறார்கள். சசிகலா விடுதலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். அதாவது, சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஏற்கனவே கூறிவிட்டார். அவருடைய கருத்துதான் ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்து. இதேபோல், சசிகலா இல்லாவிட்டாலும் கடந்த 4 வருடத்தில் அதிமுக சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனவே, சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மேலும், வருகின்ற தேர்தலில் அதிமுகவிற்கான தன்னுடைய பரப்புரை பயணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் தொடங்கிவிட்டார். தேர்தல் பயண பணிகள் அனைத்தையும் துணை முதலமைச்சர் தொடங்கிவைத்துவிட்டார். அதற்கான ஆயத்தை வேலைகள் அனைத்தும் நடந்து வருகிறது. கட்சியில் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் அடுத்தகட்டத்தில் தொடங்க இருக்கிறது. கூடிய விரைவில் வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு வரும். அதற்கு பிறகு வேட்பாளர்கள் தேர்வு குறித்த பணிகள் தொடங்கும். இதைத்தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், கூட்டணிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதேபோல், எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து அறிவிக்கப்படும். இப்படிப்பட்ட பல்வேறு பணிகளுக்காக அதிமுகவும், முதல்வரும், துணை முதல்வரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது இதற்கான ஆயத்த பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டது.

மற்றபடி சசிகலாவின் வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற முதல்வரின் கருத்தை தான் நாங்களும் முன்வைக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சபதம் போடுகிறார்கள். அந்த சபதம் என்ன என்பது அவர்கள் வெளிப்படையாக சொன்ன பிறகு தான் தெரியும். ஆனால், அதிமுக ஒரு பலம் மிகுந்த கட்சியாக இருக்கிறது. தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதல்வரின் உத்தரவின் பேரில் அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, மீண்டும் சசிகலாவுடன் செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. சட்டமன்ற தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் கூவத்தூர் போன்ற சூழ்நிலை தற்போது வருவதற்கான வாய்ப்பு இல்லை. அப்போது இருந்த காலகட்டம் வேறு. இப்போது உள்ள காலகட்டம் வேறு. அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். அதிமுக பலம் மிகுந்த கட்சியாக இருக்கிறது. தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, மீண்டும் சசிகலாவுடன் செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு

* ஆட்சி போய்விட்டால் தாமாக வந்துவிடுவார்கள்:  பழனியப்பன், அமமுக துணைப்பொதுச்செயலாளர்

ஒருசிலர் கிடையாது முதல்வரே யாரால் அந்த பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். சசிகலாவின் காலில் விழுந்து ‘எனக்கு போய் இவ்வளவு பெரிய பதவியா’ எனக்கேட்டு தேம்பி தேம்பி அழுததை அனைவரும் பார்த்தோம். ஊடகங்களும் இதை தெளிவாக எடுத்துக்காண்பித்தது. நாடே இதை பார்த்தது. இந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றியதே சசிகலா தான். சசிகலா யாரை உருவாக்கினாரோ அவர்களே தான் துரோகம் செய்தார்கள். தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது அந்த கட்சியில் உள்ளவர்களை தான் கேட்க வேண்டும். ஆனால், அதிமுகவிற்கு சசிகலா தான் தலைமை வகிக்க வேண்டும் என தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.

அதிமுகவை சசிகலாவால் தான் இனி வழிநடத்த முடியும் என அனைவரும் கூறுகிறார்கள். 27ம் தேதி சசிகலா வெளியே வருவதாக கூறினார்கள். ஆனால், திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அது தள்ளி செல்கிறது. இருந்தாலும் கட்சி என்பது சசிகலா தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்னும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை. ஆனால், முதல்வர் மட்டுமே ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கிறார். இதுபோன்று அவர்களே தங்களுக்குள் குழப்பநிலையில் தானே இருக்கிறார்கள். முதல்வரை தவிர வேறு யாரும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை. இதேபோல், கூட்டணியில் இருப்பவர்களும் தங்களுடைய இறுதி நிலைப்பாட்டை இன்னும் சொல்லவில்லை. இது எதை காட்டுகிறது என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். சசிகலா வெளியே வருவதால் அவர்களுக்கு பயம் இருக்குமா என்பது குறித்து அவர்களுக்கு தான் தெரியும். ஆனால், அதிமுகவை பொருத்தவரை சசிகலாவும், டிடிவி.தினகரனும் தான் வழிநடத்திச்செல்லப்போகிறார்கள். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

அதிமுகவுடன் அமமுக இணையுமா என்பது குறித்து தலைமை தான் யோசிக்க வேண்டும். முதலில் சசிகலா உடல்நிலை சரியாகி வர வேண்டும். அதன்பின்னர் கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும். பிரதிபலன் பார்த்து நாங்கள் செல்லவில்லை. அமமுகவை ஆரம்பித்ததே அதிமுகவை மீட்டெடுக்க தான். அதிமுகவை மீட்டெடுப்பது தான் எங்களுடைய கொள்கை. இது தான் எங்களுடைய நிலைப்பாடு. எங்களுடைய பொதுச்செயலாளரும் இதை தானே தொடர்ந்து கூறி வருகிறார். அதிமுகவை மீட்டெடுத்த பிறகு அமமுக கலைக்கப்படுமா என்பதெல்லாம் கொள்கை முடிவு. அதையெல்லாம் இப்போது தெரிவிக்க இயலாது. காலப்போக்கில் தான் அதை நிர்ணயம் செய்ய முடியும். அமமுக என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். எனவே, அதிமுகவை மீட்டெடுக்கும் போது தான் அதுகுறித்து தெரிவிக்க இயலும்.

தொண்டர்கள் எங்கள் பின்னால் இருக்கிறார்கள். ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதாலேயே அவர்கள் தனியாக இருக்கிறார்கள். ஆட்சியும், அதிகாரமும் போய்விட்டால் அதன்பிறகு அங்கு யாரும் இருக்கப்போவது இல்லை. தற்போது நடக்கும் சம்பவங்கள் தான் அதற்கு உதாரணம். ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டதால் இனி எங்கே அவர்கள் வரவேண்டுமோ அங்கு தான் அவர்கள் வருவார்கள். சசிகலாவின் வருகை கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சசிகலா வெளியே வருவதால் அவர்களுக்கு பயம் இருக்குமா என்பது குறித்து அவர்களுக்கு தான் தெரியும். ஆனால், அதிமுகவை  சசிகலாவும், டிடிவி.தினகரனும் தான்  வழிநடத்திச்செல்லப்போகிறார்கள். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Related Stories:

>