கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி

சேலம்: கடின உழைப்பே பலன் தரும், அதற்கு நானே உதாரணம். கிராமப்புற இளைஞர்கள் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றிபெறலாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறினார். இது குறித்து நடராஜன் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் விளையாடிவிட்டு, நாடு திரும்பிய எனக்கு சொந்த ஊரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு வரவேற்பு அளித்த ஊர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கும், சேலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த கனவு தற்போது நனவாகி வருகிறது. இது கடவுள் கொடுத்த வரம். அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே களம் இறங்கினேன். சர்வதேச போட்டியில் முதல் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது. களத்தில் கேப்டன் கோஹ்லி அளித்த ஊக்கத்தால் நல்ல முறையில் பந்துவீசினேன். ஐபிஎல் போட்டியில் 4 ஆண்டுகள் விளையாடியது, இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் சகஜமாகப் பேசி விளையாட எனக்கு உதவியாக இருந்தது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லி, ரகானே உள்ளிட்ட சக வீரர்கள் எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். 3 வகை கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாவேன் என நிச்சயம் நான் நினைக்கவில்லை. தொடர்ந்து, எனது கடின உழைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தேன். அதற்கு உரிய பலன் கிடைத்திருக்கிறது.

டி20 தொடரில் கோப்பையை வென்றவுடன், அதை கேப்டன் கோஹ்லி என்னிடம் வழங்குவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் கோப்பையை பெற்று எனது கையில் கொடுத்ததும், என்னை அறியாமலேயே கண்ணீர் வந்துவிட்டது. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல உத்வேகம் அளித்து என்னுடன் பழகினார்கள். சீனியர் பவுலர் அஷ்வின், மச்சி என்று அழைத்து மிக சகஜமாகப் பேசி பழகுகிறார். சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியபோதே வார்னர் என்னை வாழ்த்தினார். எனக்கு மகள் பிறந்ததும், அந்த யோகத்தில் ஜொலிக்கப் போகிறாய் என கூறினார். இப்போதும் அவர் என்னை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடின உழைப்பே பலன் தரும். அதற்கு நானே உதாரணம். எனவே கிராமப்புறங்களில் இருக்கும் இளைஞர்கள் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனக்கு சிறு வயதில் இருந்தே சச்சினை ரொம்ப பிடிக்கும். அவரை நேரில் பார்ப்பேனா என்று தெரியவில்லை. யார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பலத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதையே எப்போதும் வெளிப்படுத்துவேன். ஆஸி.யில் கிடைத்தது அணியின் ஒட்டுமொத்த வெற்றி. சமூக வலைதங்களில் ஒவ்வொரும் தங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து என்னை பாராட்டினர்.அதற்கு நன்றி. இவ்வாறு டி.நடராஜன் கூறினார். பேட்டியின்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி உடனிருந்தார்.

Related Stories:

>