சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை

சென்னை: இந்திய அணியுடன் சென்னையில் அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ள இங்கிலாந்து அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தனி விமானத்தில் நேற்று சென்னை வந்தனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இங்கிலாந்து அணி தற்போது இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடைசி டெஸ்ட் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, இங்கிலாந்து அணியினர் இலங்கையிலிருந்து தனி விமானத்தில் வரும் 27ம் தேதி சென்னை வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 6  நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.  

இதற்கிடையே இங்கிலாந்து அணியுடன் சென்னையில் இணைந்து கொள்வதற்காக நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிலரும் அணியின் உதவியாளர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் ஐதராபாத்திலிருந்து தனி விமானத்தில் நேற்று மதியம் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்பு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து சொகுசு பஸ்சில் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 15 பேரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (பிப். 5-9; பிப். 13-17) நடைபெற உள்ளன. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், 3 ஒருநாள் போட்டிகள் புனேவிலும் நடைபெற உள்ளன.

Related Stories:

>