விமான போக்குவரத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசுக்கு வேண்டுகோள்

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசி வழங்குவதில் விமான போக்குவரத்து ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்,’ என்று மத்திய அரசுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறை, முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முன் களப்பணியாளார்கள் பட்டியலில் விமான போக்குவரத்து ஊழியர்களையும் சேர்க்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘விமான போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்ற விடாமுயற்சியுடன் பலரும் உழைத்து வருகிறார்கள். எனினும், உள்நாட்டு பயணங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் மேற்கொள்ளும் பயணத்தால் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. எனவே, தடுப்பூசி வழங்குவதற்கான முன் களப்பணியாளர்கள் பட்டியலில் விமான நிலையத்தில் பணிபுரிகிறவர்கள், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் ஊழியர்கள் பற்றிய விவரங்களை வழங்க தயாராக இருக்கிறோம்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: