அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 15 கோடி குடும்பங்களிடம் நன்கொடை கேட்கப்படும்: அறக்கட்டளை நிர்வாகி தகவல்

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு 15 கோடி குடும்பங்களிடம் நன்கொடை வசூலிக்கபட இருப்பதாக, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் பொருளாளரான சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் நேற்று அளித்த பேட்டி வருமாறு: சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோராயமாக ரூ.1,100 கோடி செலவாகும் என்றும், மூன்றரை ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், பிரதான ராமர் கோயில் கட்டுமானத்துக்கு மட்டும் 300 முதல் 400 கோடி செலவாகும் என்று கணித்துள்ளனர். சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘இந்த செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், வரைபடத்தைக் கொடுங்கள்’ என்று முன் வந்தன. பணிவுடன் அதனை மறுத்துள்ளோம். பொதுமக்களிடம் இருந்து மட்டுமே நன்கொடை பெற முடிவு எடுத்துள்ளோம். 6.5 லட்சம் கிராமங்களில் உள்ள 15 கோடி குடும்பங்களிடம் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டு உள்ளோம். கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கினார் என்றார்.

* சோனியாவிடம் கேட்பீர்களா?

ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் நன்கொடை கேட்பீர்களா? என்று செய்தியாளர்கள் ஸ்வாமி கோவிந்திடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘நன்கொடை பெறுவதற்காக யாரிடமும் செல்ல நான் தயார். ஆனால், மரியாதைக் குறைவாக நான் நடத்தப்பட மாட்டேன் என்பதற்கான உத்தரவாதத்தை முதலில் தர வேண்டும்,’’ என்றார்.

Related Stories: