ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் தொகுதிகளில் தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: தா.மோ.அன்பரசன் பரபரப்பு குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் தொகுதிகளில் வாக்காளர்  பட்டியலை சரிபார்த்த போது தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின்  பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து அ.தி.மு.க.வினர் தூண்டுதலால் நீக்கப்பட்டவர்களா என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் பரபரப்பான குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :- தேர்தல் ஆணையம் கடந்த 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. அதன்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள 28.ஆலந்தூர், 29.திருப்பெரும்புதூர், 30.பல்லாவரம், 31.தாம்பரம், 32.செங்கல்பட்டு, 33.திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து பெற்று உடனடியாக அந்தந்த தொகுதிகளில் அடங்கியுள்ள பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் கழகச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டது.

உடனடியாக வாக்குச்சாவடி பாகம் வாரியாக வார்டு - கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் வழங்கி வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் கழகத்தினர் ஈடுபடச் செய்தனர்.

வாக்காளர் பட்டியல் சரிபார்த்த போது திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி எறையூர் ஊராட்சியைச் சேர்ந்த பாகம் எண்: 287-ன் வாக்குச்சாவடி தி.மு.க. நிலை முகவரான புருஷோதம்மன் என்பவர் பெயர் (பாகம் எண் : 287, தொடர் எண் : 23) டெலிட்டடு என்று அச்சிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனே அவர் நேரில் வந்து தமது பெயர் நீக்கப்பட்டுள்ளது என்று என்னிடம் ஆதாரத்துடன் புகார் மனு அளித்தார். உடனே நானும் அந்த பாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்த போது தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் பெயர் நீக்கப்பட்டது தெரிய வந்தது.

உடனே இது பற்றி மாவட்ட ஆட்சியரின் தேர்தல் நேர்முக உதவியாளரிடம் புகார் செய்துள்ளேன். அதே போல தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பெருங்களத்தூர் பேரூர் பாகம் எண் 290-ன் வாக்குச்சாவடி தி.மு.க. நிலை முகவரான சோ.மலைராசன் என்பவர் பெயர் (பாகம் எண் - 290, தொடர் எண் - 227) டெலிட்டு என்று அச்சிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெருங்களத்தூர் பேரூர் பாகம் எண் 291-ன் வாக்குச்சாவடி தி.மு.க. நிலை முகவரான எம்.வரதன் என்பவர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பெருங்களத்தூர் பேரூர் பாகம் எண் 293-ன் வாக்குச்சாவடி தி.மு.க. நிலை முகவரான சி.சோமு என்பவர் பெயர் (பாகம் எண் - 293, தொடர் எண் - 124) வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேகமாக தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி தி.மு.க. நிலை முகவர்கள்  பெயர்கள் மட்டும் எப்படி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்களான இரு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் விளக்கம் தந்திட வேண்டும்

தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து உரிய ஆதரங்களுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனு தர உள்ளோம்.

அப்புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாவட்ட ஆட்சியரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காவிட்டால் தமிழக தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க. தலைமைக் கழக வழக்கறிஞர் மூலம் புகார் செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று கழகத்தினர் பெயர் ஏதாவது நீக்கப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை உடனடியாக மாவட்டக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: