திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழா ரத்து

திருப்போரூர்: கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்கள் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டன. பக்தர்கள் கோயிலின் உள்ளே சென்று மூலவரை வணங்கிச்செல்லவும் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு கோயில்களில் தினசரி வழிபாடுகள் மட்டும் நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தில் கந்தசஷ்டி விழாவும், மாசி மாதத்தில் பிரமோற்சவ விழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நவம்பர் மாதம் கந்தசஷ்டி விழா எளிய முறையில் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. இந்நிலையில் இந்த மாதம் 28ம் தேதி வியாழக்கிழமை தைப்பூச விழா முருகன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அண்மையில் தமிழக அரசு தைப்பூச விழாவை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தைப்பூச விழாவை எளிமையான முறையில் அனுசரிக்குமாறு வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நடைபெறும் தெப்ப உற்சவம் இந்த ஆண்டு ரத்து செய்யப் பட்டுள்ளது.

இது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தைப்பூசத்தன்று பொது மக்களுக்கு தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மாசி பிரமோற்சவ விழா வருகிற பிப்ரவரி மாதம் 18ம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெறும். அதற்கு அனுமதி கேட்டு கோயில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 28ம் தேதி சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். அதில் கொரோனா ஊரடங்கை முற்றிலுமாக விலக்கிக் கொள்வது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இதற்கு பிறகே கோயில்களில் பிரமோற்சவ விழாவிற்கு அனுமதி வழங்கப்படுமா என்று தெரிய வரும்.

Related Stories: