ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது: மக்கள் சபை கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் பேச்சு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மெய்யழகன், ஸ்ரீகாந்த், ராஜா எ.எம்.சேகர், கண்ணன், சி.ஜே.கார்த்திக், இன்பசேகர், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், ‘ஊரப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு வரி, குடிநீர் வசதி போன்று குப்பைகளை அகற்றுவதற்காக வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால், குப்பை அகற்றப்படுவது கிடையாது. மேலும், குடிநீர் சரிவர வருவதில்லை. கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் பயனில்லை.

எதை கேட்கிறோமோ அதை அதிமுக அரசு செய்து தரவில்லை. எதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோமோ அதைத்தான் அதிமுக அரசு செய்து வருகிறது என சரமாரியாக புகார் கூறினர். அப்போது, தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ பேசுகையில், ‘இன்னும் மூன்று மாதத்தில் அதிமுகவின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும். அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும். வருகின்ற சட்டமன்ற தேர்தலின்போது ஒரு ஓட்டுக்கு ரூ. 25 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது என்று சவால் விட்டு பேசினார். இதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜே.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கருணாகரன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>