திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் மனு

ஆவடி: புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான முல்லை கே.பலராமன், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவடி மாநகராட்சி 8வது வார்டில் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் உள்ளது. இந்த நகர் 1964ல் குடியிருப்பு மனைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நகரில் ஒரு சில சாலைகளே போடப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

குறிப்பாக சரஸ்வதி நகர் முதல் தெரு, 2வது, 3வது மற்றும் 4வது தெருவில் கிழக்கு பகுதி மேற்கு பகுதி, 5வது தெருவில் கிழக்கு பகுதி மேற்கு பகுதி, 6வது தெருவில் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி, மேலும் விரிவாக்கத்தில் உள்ள முதல் தெரு, 2வது குறுக்குத்தெரு, காந்தி தெரு, எம்.ஜி.ஆர். மேற்கு பகுதி தெரு, அண்ணா தெரு, காந்தி தெரு மேற்கு பகுதி 12வது தெரு மற்றும் பியூலா தெருக்கள் ஆகிய தெருக்கள் 56 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலைகளாகவே உள்ளது.

இந்த தெருக்களில் சிறு மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டே சென்று வருகின்றனர். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் வந்து செல்ல முடியவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் வந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் இன்று வரை சாலைகள் அமைக்கவில்லை. எனவே திருமுல்லைவாயல் சரஸ்வதி நகருக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்காத சலைகளை மழைநீர் கால்வாயுடன் சிமெண்ட் மற்றும் சாலை அமைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: