கோவை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ஏழை, எளிய மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்

கோவை: ஏழை, எளிய மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை பிரசாரத்தில் பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் நேற்று 2வது நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது பிரசாரத்தை துவக்கினார். அங்கு அவர் பேசியதாவது: தமிழக மக்களுக்கு, எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. அனைத்து மதத்தினரையும் சமமாக பாவிக்கும் கட்சி அ.தி.மு.க. எவ்வித பாகுபாடும் பார்க்காமல், செயல்பட்டு வருகிறோம்.

புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளன. தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும், தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக, தொழில்துறையினர் தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடு முன்னேற்றத்துக்கு, தடையில்லா மின்சாரம் இன்றியமையாதது. அதன்படி, தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறோம். ஆண்டுக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கு, ஐந்து ஆண்டுகளில் 40 ஆயிரம் ரூபாய்க்கு இலவச மின்சாரம் வழங்குகிறோம். இந்த பயனை, எல்லா கட்சியினரும் பெற்றுள்ளனர்.

அதிக அளவில் தேசிய விருதுகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. உள்ளாட்சித் துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு 100க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைய இறைவன் வரம் கொடுத்து விட்டார். அதை, யாரும் தடுக்க முடியாது. ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலைகளை தமிழ்நாட்டில் அமைக்க மத்திய அரசிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்துள்ளோம். தொழில்துறை மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பெருக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 332 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 92 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்துள்ளனர். காப்பீட்டு திட்டத்தின்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ.2 லட்சத்தில்  இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் உயர்மட்ட பாலங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அ.தி.மு.க. அரசு என்றும், எப்பொழுதும் ஏழை, எளிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories:

>