அகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி? அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 15 கிரவுண்ட் அதாவது 36,259 சதுர அடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அது வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள சீனிவாசன் மற்றும் மோகனா என்பவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிலத்துக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் சார்பாக நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி வாடகை பாக்கி வைத்துள்ளவர்களை அகற்ற உத்தரவிட்டது.

அதன்பேரில், கடந்த 25ம் தேதி  அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டு, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலத்தை வைத்து வங்கியில் சீனிவாசன், ராஜன் என்பவரின் பெயரில் 2010ல் ரூ.69 கோடி வரை கடன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.கோயில் பெயரில் நிலங்கள் இருந்த சூழலில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோயில் ஊழியர்கள் முதல் இணை ஆணையர் வரை தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக ஆணையர் பிரபாகர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

Related Stories:

>