கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பெண்களுக்கு திடீர் மூச்சுத்திணறல்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் தூய்மை பணியாளர்கள் 2 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தினமும் 100 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்படுகிறது. இந்நிலையில் முதல் நாளான ஜன. 16ம் தேதி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பலர் ஆர்வமுடன் ஊசி போட்டுக் கொண்டனர். அதன்பிறகு தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தூய்மை பணியாளரான வியாசர்பாடியை சேர்ந்த மீனா (29), மற்றொரு தூய்மை பணியாளரான வியாசர்பாடியை சேர்ந்த அம்மு (40) ஆகியோர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர். இருவருக்கும் மூச்சு திணறல், உடல் சோர்வு பிரச்னை ஏற்பட்டது. இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை கேள்விப்பட்ட சிலர், தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்து நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் பேசும்போது “கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பு ஊசி போட்டு வருகிறோம். கல்லூரி முதல்வர், செவிலியர்கள் மற்றும் நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம்.

இதுவரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மருத்துவமனையில் அனுமதித்திற்கும் இந்த ஒப்பந்த ஊழியர்கள் உடல் சோர்வு, மூச்சு திணறல் இருப்பதாக மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் பரிசோதனையில் தடுப்பூசி போட்டதால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஓவ்வொரு முறையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டதால் இவர்களுக்கு எதிர்விளைவுகள் ஏற்படவில்லை, இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்திருக்கிறோம். பிறகு, வீட்டிற்கு அனுப்பிவிடுவோம்” என்றார்.

Related Stories: