சொந்த மாவட்டத்தில் எதிர்ப்பு போஸ்டர்களால் ஜல்லிக்கட்டு விழாவை புறக்கணித்தார் ஓபிஎஸ்: தொடங்கி வைக்கும் நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து

உத்தமபாளையம்: சொந்த மாவட்டத்தில் ஒட்டப்பட்ட எதிர்ப்பு போஸ்டர்களால் பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு விழா தொடங்கி வைக்கும் நிகழ்வை கடைசிநேரத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் ரத்து செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே, பல்லவராயன்பட்டியில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விழா நேற்று காலை தொடங்கியது. இதில், 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில், 24ம் தேதி (நேற்று) காலை 8 மணிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால், விழா கமிட்டியினர், அதிமுகவினர் நேற்று முன்தினம் இரவு முதல் ஓபிஎஸ்ஸை வரவேற்கும் பேனர், போஸ்டர் ஓட்டுவதில் தீவிரமாக இருந்தனர். ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டம் என்பதால், நிச்சயமாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை தேனி கலெக்டர் அலுவலக பிஆர்ஓ நிகழ்ச்சி குறிப்பில், துணைமுதல்வர் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* ஜல்லிக்கட்டு விழா ரத்து ஏன்?

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, தமிழகத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சட்டத்தை கொண்டு வருவதற்கு, மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை நின்றது. தேனி தொகுதி எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்தும் சட்டத்தை ஆதரித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தேனி நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகர் அல்ல, ஜல்லிக்கட்டு வில்லன்’ என நாட்டுமாடுகள் நலச்சங்கத்தினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக, இந்த அமைப்பைச் சேர்ந்த கலைவாணன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொந்த மாவட்டத்தில் எதிர்ப்பு குரல் உருவானால், அது தற்போதைய அரசியல் சூழலில் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக இருக்காது என்பதாலேயே இந்த விழாவை அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: