எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் ஆருடம் நாளைய முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதிமுக எம்எல்ஏ பேச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ‘நாளை தமிழகத்தின் முதல்வராகப்போகும் மு.க.ஸ்டாலின்’ என வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மணிக்கூண்டில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ பரமசிவம் பேசுகையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவேண்டும். நாளை தமிழகத்தின் முதல்வராகப்போகும் மு.க.ஸ்டாலின் அனைவரையும் ஒரே பார்வையாக பார்க்க வேண்டும்’’ என்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதை கேட்டு தர்மசங்கடம் அடைந்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், பரமசிவத்தை பார்த்து மாற்றி பேசுமாறு கூறினார். உடனே சுதாரித்த பரமசிவம், ‘‘வரலாற்று பிழை இழைத்து விட்டேன்; எனது வாயை டெட்டால் மற்றும் பினாயில் கொண்டு கழுவுவேன்’’ என்றார்.

* வழக்கம்போல உளறிய வனத்துறை அமைச்சர்

விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘முலாயம்சிங் பிரதமராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது...’’ என உளறினார். அங்கிருந்த கட்சியினர் குறுக்கிட்டு, அவரது தவறைச் சுட்டிக்காட்டியதும், சுதாரித்துக் கொண்டு, ‘‘ மன்மோகன்சிங் ஆட்சியின்போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது’’ என்றார்.

Related Stories:

>