உதவிப்பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயமாக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம், தகுதித் தேர்வில் தேர்ச்சி ஆகிய இரண்டுமே கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இது சரியான நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், போதிய முன்னேற்பாடுகள் இன்றி இந்த சீர்திருத்தத்தை யு.ஜி.சி அறிமுகப்படுத்திருப்பது தான் தவறானதாகும்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த விதியை மாற்றிய யு.ஜி.சி, பேராசிரியர்கள் மட்டும் தான் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். இணைப் பேராசிரியர்கள் 6 பேருக்கும், உதவிப் பேராசிரியர்கள் 4 பேருக்கும் மட்டும் தான் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்ட முடியும் என்று அறிவித்தது. அதனால் முனைவர் பட்ட ஆய்வுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதுமட்டுமின்றி, பத்தாண்டுகளுக்கு முன்பு வரை முனைவர் பட்ட ஆய்வுக்கு திறமை மட்டும் போதுமானதாக இருந்தது. திறமை மட்டும் இருந்து விட்டால், சில ஆயிரம் செலவில் கூட முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள முடியும்.

முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள், ஆய்வுக்கட்டுரையை தாக்கல் செய்வதற்கு முன்பாக அதற்கென அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆய்வு இதழ்களில் குறைந்தபட்சம் இரு ஆய்வுக் கட்டுரைகளையாவது பதிப்பித்து இருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் ஆய்வு இதழ்களில் ஆய்வுக் கட்டுரை வெளியாவதற்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய நிபந்தனைகளால் முனைவர் பட்டம் பெறுவதென்பது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறி விட்டது. இந்த நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் களையாமல் உதவிப்பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்ற நிபந்தனையை விதிப்பது நியாயமல்ல. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>