நாளை குடியரசு தினவிழா தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு: ரயில், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

சென்னை: நாடு முழுவதும் 72-வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நாளை காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். குடியரசு தினத்தன்று தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அனைத்து மாநில உள்துறை  செயலாளர்களுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 12 கடலோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி திரிபாதி  உத்தரவிட்டுள்ளார்.

அதைதொடர்ந்து மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களுக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர். கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு படையுடன் இணைத்து கடலோர பாதுகாப்பு குழுமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி 20 ஆயிரம் போலீசார் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும்வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் மெரினா பகுதிக்கு பொதுமக்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மூலம் வீடுகளிலேயே நேரடியாக பார்க்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: