கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஜன. 29ல் ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் நடக்கிறது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடும் கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் தினசரி 300க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கும் நிலைதான் உள்ளது. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தில் உருவாகியுள்ள வீரியமிக்க கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், 12வது கட்டமாக வரும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பாதிப்ைப கட்டுக்குள் முழுவதுமாக கொண்டு வரப்படவில்லை.

இந்த நிலையில், வரும் 31ம் தேதிக்குள் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து அன்றைய தினமே மருத்துவ நிபுனர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில், கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், அடுத்தகட்டமாக அறிவிக்க வேண்டிய தளர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. புதிய அச்சுறுத்தலாக இங்கிலாந்தில் தோன்றியுள்ள வீரியமிக்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும், தமிழகத்தில் எடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: