தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது: கோவை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோவை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில் துறையினர் ஆர்வமாக உள்ளதாக கோவை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கோவை, பொள்ளாச்சியில் பிரசாரம் செய்தார். இரவில் கோவை ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர் புலியகுளம் மற்றும் சிங்காநல்லூரில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் எதை செய்தோமோ அதை சொல்லியே மக்களிடத்தில் வாக்குகள் கேட்டு வருகிறோம். தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. அனைத்து மதத்தினரையும் சமமாக பாவிக்கும் கட்சி அதிமுக. கட்சி பாகுபாடு இல்லாமல் செயல்பட்டு வருகிறோம்.  புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளன. தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழில் துறையினர் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு நாடும், நாட்டு மக்களும் சிறப்படைய தடையில்லா மின்சாரம் இன்றியமையாதது.

அதன்படி தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு 8,000 ரூபாய்க்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில் 40 ஆயிரம் ரூபாய்க்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அதிமுக கட்சியினர் மட்டுமின்றி அனைத்துக் கட்சியினரும் பயன்பெற்று வருகின்றனர். அதிக அளவில் தேசிய விருதுகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. உள்ளாட்சித் துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு 100க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. அதிமுக அரசு ஆட்சி அமைக்க இறைவன் வரம் கொடுத்து விட்டார். ராணுவ தளவாட உதிரிபாக நிறுவனங்களை தமிழ்நாட்டில் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இந்த ஆண்டில் 332 பேர் எம்பிபிஎஸ் படிப்பிலும், 92 பேர் பல் மருத்துவப் படிப்பிலும் சேர்ந்துள்ளனர். காப்பீடு திட்டத்தின் படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் பாலங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக அரசு என்றும் எப்போதும் ஏழை எளிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

எனவே அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியாக ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’’. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார். இதனைத் தொடர்ந்து ரொட்டிக்கடை மைதானம், காளப்பட்டியில் பிரசாரம் செய்தார். முதல்வர் வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: