464வது கந்தூரி விழா; நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் நினைவு நாளையொட்டி ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறும். இந்தாண்டு 464-வது கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று நடந்தது. சந்தன கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு புறப்பட்டது.

பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைத்தனர். இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, இன்று அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு எடுத்து சொல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories:

>