முறப்பநாடு பகுதிகளில் தாழ்ந்து செல்லும் மின்கம்பியில் சிக்கி அடிக்கடி பலியாகும் மாடுகள்

செய்துங்கநல்லூர்: முறப்பநாடு அகரத்தைச் சேர்ந்தவர் சப்பாணி(65). இவர் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பொங்கலுக்கு மறுநாள் மேய்ச்சலுக்கு சென்ற அவரது பசுமாடு வீடு திரும்பவில்லை. இதையடுத்து சப்பாணி மாட்டை தேடி சென்றார். மழை காரணமாக மாட்டைத் தேட முடியவில்லை. ஒரு வாரமாகியும் மாடு வராததால் நேற்று முன்தினம் அகரம் பகுதியில் தேடி சென்ற போது மாடு மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.  இதேபோல் கடந்த மாதமும் 2 பசுமாடுகள் வயல்காட்டில் தாழ்ந்து சென்ற மின்கம்பியில் சிக்கி இறந்தது குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து மாட்டை இழந்த விவசாயியான சப்பானி கூறும்போது, மின்ஊழியர்களின் அலட்சியத்தால் இதேபோல அடிக்கடி மின்சாரம் தாக்கி கால்நடைகள் பலியாகின்றன.

ஐந்தாவது முறையாக இப்பகுதிகளில் அறுந்து கிடந்த மின்கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து மாடு இறந்துள்ளது. ஆனால் மின்வாரியம் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாதவாறு, ஊழியர்கள் மின்கம்பிகள் அனைத்தையும் சரிசெய்து மனித உயிர்களை காப்பாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவரை ஐந்து உயிர்கள் பறிபோயுள்ளது. முறப்பநாடு பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் நடைபெறாதவாறு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories:

>