×

ஜன.26-ல் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி: விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசல் தர உ.பி., ஹரியானா அரசு மறுப்பதாக புகார்..!

டெல்லி: உத்தரபிரதேசம், ஹரியான மாநிலங்களில் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையே வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அமைப்பினர் அறிவித்தனர். டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் நடத்தவிருக்கும் டிராக்டர் பேரணிக்கான பாதை இன்று இறுதி செய்யப்பட உள்ளது.

டெல்லி, ஹரியானா போலிஸார் டிராக்டர் பேரணிக்கான முதற்கட்ட அனுமதி வழங்கி இருப்பதாக நேற்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எந்த எந்த சாலைகளில் எவ்வளவு தூரம் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்கப்படும் என்பது தொடர்பாக இன்று இறுதி செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக விரிவான வரைபடங்களைத் தரும்படி போலிஸார் கேட்டுள்ளனர். அவை இன்று டெல்லி போலிஸுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு எந்தெந்த சாலைகளில் எவ்வளவு தூரத்திற்கு பேரணி நடத்த அனுமதிப்பது என்பது தொடர்பாக போலீசார் இறுதி செய்து அனுமதி வழங்க உள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் டெல்லியில் அணிவகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்கள் டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதற்கிடையே உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் பல இடங்களில் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று அந்த மாநில அரசுகள் தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது. பல பெட்ரோல் பங்குகளில் நேற்று முதல் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

Tags : Farmers tractor rally ,government ,Delhi ,Haryana , Farmers' tractor rally in Delhi on Jan 26: UP, Haryana government denies petrol, diesel quality to farmers ..!
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு