உயர்மட்ட பாலம் இல்லாததால் நதியில் இடுப்பளவு நீரில் நனைந்து செல்லும் அவலம்: மாணவர்கள், பொதுமக்கள் பரிதவிப்பு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் இல்லாததால் 8 கிராம மக்கள், மாணவர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பள்ளி செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூரில் ஓடாத்தூர், சேந்தநதி, வல்லாரேந்தல், வாகைகுளம் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், அரசு மருத்துவமனை, பள்ளி செல்வதற்கும் பழையனூர்தான் வர வேண்டும். இவர்கள் பழையனூர் செல்லும் பாதையில் கிருதுமால் நதி உள்ளது. மழைக்காலங்களில் கிருதுமால் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது கிராம மக்கள், மாணவர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்துதான் நதியை கடக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளின் பாசன தேவைக்காக மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து, கடந்த 20ம் தேதி 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் 2 நாட்களுக்கு முன்பு பழையனூர் கிருதுமால் நதியை வந்தடைந்தது. இதனால் ஓடாத்தூர் உள்ளிட்ட 8 கிராமங்களும் தனித்தீவாக மாறி விட்டன. இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த 2 அரசு பஸ்கள் பழையனூருடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறந்தும் 10, 12ம் வகுப்பு மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி செல்கின்றனர். கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்களின் சிரமத்தை போக்க நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் தரைப்பாலத்தை கட்டியுள்ளனர். இது பயனின்றி உள்ளது. அவசர தேவைக்கு கூட வர முடியாமல் தவித்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்திற்கு கிருதுமால் நதியில் தண்ணீர் செல்லும். அதுவரை எங்களுக்கு சிரமம்தான். எனவே உடனடியாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>