ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித்தவிக்கும் நொய்யல் ஆறு: நீரின்றி வறண்டுபோகும் பாசன வாய்க்கால்

கோவை: ஆக்கிரமிப்பின் பிடியில் நொய்யல் ஆறு சிக்கித் தவிக்கிறது. மழை கொட்டியும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிக்கின்றனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் துவங்கும் நொய்யல் ஆறு 113 கி.மீ. தூரம் பாய்ந்து கொடுமுடியில் காவிரி ஆற்றில் கலக்கிறaது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக நொய்யல் ஆறு இருக்கிறது. நொய்யல் ஆற்றின் மூலமாக மேற்கண்ட 3 மாவட்டத்திலும் சுமார் 2.3 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. நொய்யல் ஆற்று நீரை நம்பி 47 குளங்கள் உள்ளன. நடப்பாண்டில் பெய்த மழையால் கோவை மாவட்ட எல்லைக்குள் நொய்யல் ஆற்றில் கணிசமான அளவு தண்ணீர் பாய்ந்தது. கடந்த பல ஆண்டாக வறண்ட நிலையில் இருந்த 24 குளங்களில் நீர் நிரம்பியது. ஆனால், பாசன வாய்க்காலில் நீர் பாயவில்லை. சித்திரைச்சாவடி பாசன வாய்க்கால், வெள்ளலூர், குறிச்சி, சிங்காநல்லூர், இருகூர், நீலம்பூர், சாமளாபுரம், செம்மாண்டம்பாளையம் உள்பட கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 500 கி.மீ. தூரமுள்ள பாசன வாய்க்கால் அடைபட்டு கிடப்பதால் விவசாய நிலங்களுக்கு நீர் பாயவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள், நொய்யல் ஆற்று நீரை பெயரளவிற்கு குளங்களுக்கு திருப்பிவிடுகின்றனர் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

நொய்யல் ஆற்று நீரை நேரடியான பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், பாசன வாய்க்கால் சுமார் 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அடைபட்ட நிலையில் உள்ள வாய்க்காலில் நீரை திருப்பிவிட்டால் ஊருக்குள் நீர் புகுந்து விடும் என பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை ெதாண்டாமுத்தூர் வட்டாரத்தில் மஞ்சள், கரும்பு, சோளம், தக்காளி, அவரை, துவரை, திராட்சை, முட்டைகோஸ், வெண்டை, எள் போன்றவை பயிரிடப்படுகிறது. நொய்யல் ஆற்று நீர், பாசன வாய்க்காலில் வந்தால், விளைச்சல் அதிகரிக்கும். ஆனால், கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பாசன வாய்க்கால் தூர் வாரி சீரமைக்கப்படாமல் மண் மூடி கிடக்கிறது. பாசன வாய்க்காலில் நீர் பாய்ந்தால் உள்ளூரில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். ஆனால், இதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி, செம்மேடு, காளம்பாளையம், வெள்ளலூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம் மற்றும் சூலூர் வட்டாரத்திலும் பாசன வாய்க்கால் சீரமைக்கப்படவில்லை.

கடந்த பல ஆண்டாக இவை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது. நகர்ப்பகுதியில் சில பாசன வாய்க்காலை சாக்கடை நீர் வெளியேற்ற பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சிங்காநல்லூர் பாசன வாய்க்காலில் சாக்கடை கழிவு நீர் முழு அளவில் திருப்பி விடப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில், துவக்கத்தில் இருந்தே பல இடங்களில் ஆக்கிரமிப்பு பெருமளவில் உள்ள காரணத்தால், மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்தும், நொய்யல் ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் ஓடவில்லை. ஆற்றின் கரையோரம் வழிெநடுகிலும் தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் போட்டி போட்டு ஆக்கிரமித்துள்ளன. இதன் காரணமாக, கிளை ஆறுகளுக்கு தண்ணீர் செல்வதும் தடைபட்டுள்ளது. நொய்யல் ஆறும், அதன் கிளை ஆறுகளும் வறண்டு கிடப்பதால், இவற்றை நம்பி பாசனம் பெறும் பகுதிகள் காய்ந்து கிடக்கின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: நொய்யல் ஆறு சீரமைப்பு திட்டம், 35 ஆண்டிற்கும் மேலாக நடக்கவில்லை. தடுப்பணைகள் மண் மூடி கிடக்கிறது. குளங்களுக்கு வரும் நீர், உள்ளூரில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பயன்படுகிறது. நொய்யல் ஆற்றில் பெரும்பாலான இடங்களில் சாக்கடை நீர் தேங்கியிருப்பதால், மழை நீர் குளங்களுக்கு முழுமையாக செல்லவில்லை. சாக்கடை நீரை வெளியேற்றி, மழை நீரை தேக்க எந்த வசதியும் இல்லை.

குளம், ஆறு, பாசன வாய்க்கால் சீரமைப்பு திட்டத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கி, பணிகளை துவக்க வேண்டும். தொடர் ஆக்கிரமிப்பு காரணமாக, பாசன வாய்க்காலில் நீர் வரும் என்ற நம்பிக்கை ேபாய் விட்டது. பாசன வாய்க்காலில் நீர் வராததால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். நொய்யல் ஆக்கிரமிப்பை தடுக்க, அதிகாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் அடங்கிய தனி கமிட்டி அமைக்க வேண்டும். தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர், பாசன வாய்க்கால்களை விரைந்து சீரமைக்க வேண்டும். நொய்யல் ஆற்றை, பாசன திட்டத்திற்கு முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பணியை விரைவாக மேற்கொண்டால்தான் நொய்யல் ஆறு பிழைக்கும். பாசன விளைநிலங்கள் வளம்பெறும். இவ்வாறு சு.பழனிசாமி கூறினர். தமிழக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், ‘’பாசன வாய்க்கால் சீரமைப்பு பணி நடக்கிறது. நொய்யல் கிழக்கு பகுதியில் பாசன வாய்க்காலில் நீர் திறக்க முடியாத நிலை இருக்கிறது.  வாய்க்கால் சீரமைக்க அதிக தொகை தேவைப்படுகிறது. ஷட்டர் சீரமைத்து, கான்கிரீட் வாய்க்கால் அமைத்து கடைமடை வரை நீர் வினியோகிக்க தேவையான கட்டமைப்பு ஏற்படுத்தவேண்டியுள்ளது. ஆண்டுதோறும் இந்த பணிக்காக நிதி கோரப்பட்டு வருகிறது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நொய்யல் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது’’ என்றனர்.

Related Stories: