தேர்தல் ஆணைய உத்தரவை மதித்து மக்கள் வரிப்பணத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஆர். எஸ். பாரதி எம்.பி வலியுறுத்தல்

சென்னை: கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட தேர்தல் ஆணைய உத்தரவை மதித்து மக்கள் வரிப்பணத்தில், ஆளும் அ.தி.மு.கவையும் அதன் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியையும் முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி எம்.பி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; கொரானா பாதிப்பு காரணமாகவும் மற்றும் புயல் பாதிப்பு காரணமாகவும் தமிழக மக்கள் இன்னலுற்ற நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 5,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதனை பல மாதங்களாக கண்டுகொள்ளாத அதிமுக அரசு, விரைவில் நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை மனதில் வைத்து, பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ2,500 ரொக்கமாகவும், அரிசி மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென்று அறிவித்தார். மேலும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின் இடையே இந்தத் திட்டத்தை தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை அதிமுக கட்சி வண்ணத்தில் அடித்தும், அவரது படத்தையும் துணை முதலமைச்சர் படத்தையும் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் படத்தையும் அச்சடித்து ஏதோ அதிமுகவினர் தான் பொங்கல் பரிசு வழங்குவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு டோக்கன்களை அதிமுகவினர் வழங்கி வந்தனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் சட்டவிரோதமாக பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை தொடர்ந்து வினியோகித்து வந்த நிலையில், கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் கழகத்தின் சட்ட திட்டத் திருத்தக்குழு செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான திரு.பி. வில்சன் எம்பி அவர்கள் ஆஜராகி வாதாடினார்.

அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் கட்சியின் சின்னத்தையோ தங்களுடைய அரசியல் கட்சியின் தலைவர்களையோ முன்னிலைப்படுத்தி அல்லது அவர்களை பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கின்ற வகையில், மக்கள் பணத்தை பயன்படுத்தி விளம்பரப் படுத்தக் கூடாது என்றும்; அவ்வாறு விளம்பரப்படுத்தினால் அந்த அரசியல் கட்சி மீது, அரசியல் கட்சியின் சின்னங்களுக்கான விதிமுறைகளின் கீழ் அந்த அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் 7.10.2016ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு விதிமுறைகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்று தனது வாதத்தில் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

Related Stories: