சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளுக்கு பரிதவிக்கும் கெடமலை: சிகிச்சைக்கு டோலியில் தூக்கும் சிரமம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கெடமலை கிராமம், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறது. நோயால் பாதித்தவர்களை டோலிகட்டி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவலம், பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலைகிராமங்கள் அதிகளவில் உள்ளது. இன்றளவும் நம் முன்னோர் காட்டிய வழியில் வாழ்க்கை நடத்தி பாரம்பரியம் காத்து நிற்பவர்கள், மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களே என்றால் அது மிகையல்ல. ஆனால் இவர்கள் சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக போராட்டம் நடத்தி அல்லல்பட்டுக் கொண்டிருப்பது காலத்தின் கொடுமை. இதற்கு உதாரணமாக திகழ்கிறது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள கெடமலை கிராமம். கெடமலையில் மேலூர், கீழூர் உள்ளிட்ட குக்கிராமங்களையும் உள்ளடக்கிய கெடமலையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மேலூர், கீழுர் கிராமங்களுக்கு வடுகம் பகுதியில் இருந்து செல்ல வேண்டும். கெடமலைக்கு புதுப்பட்டியில் இருந்து 11 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதேசமயம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டியை அடுத்த சம்பூத்துமலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில்தான் கெடமலை உள்ளது. தற்போது சம்பூத்து மலை வரை தார்சாலை வசதியுள்ளது. அதற்கு மேல் வனப்பகுதியில் உள்ள சலையில் செல்ல வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இங்குள்ள மக்கள் மிளகு, சாமை, தினை,  கொள்ளு போன்றவற்றை தங்களது வாழ்வாதாரத்திற்காக சாகுபடி செய்கின்றனர். இதற்காக கடுமையாக உழைக்கும் அவர்கள், மலைப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட பல்வேறு கொடிய மிருகங்களுடன் போராடியே அதை காப்பாற்றி வருகின்றனர். ஆனால் இப்படி காப்பாற்றி வளர்த்த பயிர்களை உரிய நேரத்தில் அவர்கள், அடிவாரத்திற்கு கொண்டு வந்து விற்பதற்கு உரிய சாலை வசதி இல்லை. இதனால் ஆண்டு முழுவதும் அவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கான பலன் இல்லாமல் போகிறது.இப்படி பயிர்களை காக்க போராடும் மக்கள், தங்களது உயிர்களை காக்கவும் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது பெரும் வேதனை.

இங்கு வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் கரடு, முரடான பாதைகளில்  பலகிலோ மீட்டர் தூரம் நடந்து அடிவாரத்தில் உள்ள ஆயில்பட்டிக்கு வரவேண்டும். சாலை வசதி, வாகன வசதி இல்லாததால், கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டோரை டோலி கட்டி அதன் மூலம் மட்டுமே தூக்கி வரவேண்டும். இதனால்  கீழே வருவதற்குள் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் அவலமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதேபோல் மலைகிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. 5ம்வகுப்புவரையுள்ள இந்த பள்ளியில் ஆசிரியர்கள் அறவே பணிக்கு வருவதில்லை. இதனால் இங்குள்ள மக்களின் கல்வி 5ம்வகுப்போடு முடிந்து விடுகிறது. அதுவும் ஆசிரியர்கள் வராததால் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது மட்டுமன்றி மின்சாரம், குடிநீர், சாக்கடை, நியாயவிலைக்கடை என்று அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே ஆண்டாண்டு காலமாய், இவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின் போதும் இங்கு வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினர் வருகின்றனர்.

அப்போது நாங்கள் வெற்றி  பெற்றவுடன் உங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதே முதல்வேலையாக இருக்கும் என்று வாக்குறுதி கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இந்த வாக்குறுதி காற்றில் கலந்து விடும். வெற்றி பெற்றவர்கள், மறந்துகூட கெடமலைப் பகுதியில் தலைகாட்டுவதில்லை என்பது இங்குள்ள ஒட்டு  மொத்த மக்களின் மனக்குமுறல்.ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  கெடமலை தற்போது அமைச்சரின் தொகுதி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இதனால் தங்களுக்கு ஏதாவது நன்மை நடக்கும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும் நான்கு ஆண்டுகளாக கானல் நீராகவே இருக்கிறது. இதற்கிடையில் கோரிக்கைளை நிறைவேற்ற பல்வேறு நூதன போராட்டங்களை மக்கள் நடத்தியும் பலனின்றி போய்விட்டது. தங்களது முயற்சியில் அவர்கள் சாலை அமைத்த போதும், அதிரடியாக அதிகாரிகள் அதனை தடுத்து விட்டனர். இதனால் விரக்தியில் ஆழ்ந்துள்ள கெடமலை மக்கள், வரும் சட்டமன்றத்  தேர்தலில் தங்களது முடிவை மாற்றி எழுத ஆயத்தமாகி வருகின்றனர்.

Related Stories:

>