திருத்துறைப்பூண்டியில் 13 வருடமாக கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை:போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள்

திருத்துறைப்பூண்டி: 13 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் கிடக்கும் திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பணி நிறைவேற்றப்படுமா என வாகனஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்திலிருந்து வேதை சாலை வரை ஒரே சாலைதான். இந்த சாலையிலிருந்துதான் மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பிரிவு நெடுஞ்சாலைகள் உள்ளன. மேலும் நகராட்சி தெரு சாலைகளும் பிரிகிறது. நகரில் அளவுக்கு அதிகமாக ஆக்கிரமிப்புகள் உள்ளதால் இந்த ஒரே சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவரச தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் திருவாரூர் சாலை வேளூர் பாலத்திலிருந்து நாகை பைபாஸ் சாலை வரை 2.6 கி.மீ. புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.7 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்தப் பணி தொடங்கப்பட்டது.

புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலங்கள் பெரும்பாலானவை அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். நிலங்களுக்கான மதிப்பீடு தொகை நிர்ணயிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பணி நின்றுபோய் நிதியும் திரும்பி போய் பணிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பின்னர் முதல் தவணை தொகையாக நிலம் கையகப்படுத்த ரூ.4 கோடி 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய திட்ட மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணி மீண்டும் துவங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நிலம் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கையகப்படுத்தப்பட்ட இடங்களில் புறவழிச்சாலை சாலை பணி தொடங்கப்படாததால் சும்மா கிடக்கும் வயலில் அந்தந்த விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சாலை பணி துவங்கும்போது சாகுபடி செய்யமாட்டோம் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தில் திருத்துறைப்பூண்டி திருக்குவளை அகல ரயில் பாதையில் ரயில்வே பாலம் மற்றும் தண்டவாளம் அமைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனால் மேலும் காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அன்றைய மதிப்பீட்டின்படி புறவழிச்சாலைக்கான நிதி சுமார் ஏழரை கோடி ஒதுக்கப்பட்டு திரும்பி சென்றுவிட்டது. மேலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுமதிப்பீடு செய்து ரூ.25 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கினால் மட்டுமே புறவழிச்சாலை பணியை மேற்கொள்ள முடியும். இந்த புறவழிச்சாலை பணி என்பது 13 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணியை துவக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 5,000 பேரிடம் கையெழுத்து இயக்கம் பெற்று முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சேவை சங்கங்களும் கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர். எனவே அரசு உடனடியாக புறவழிச்சாலை பணியை துவக்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு ஆணையை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார்: திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து விதிகள் பொதுமக்களால் முறையாகப் பின்பற்றப்படாத காரணத்தாலும், புறவழிச்சாலை இல்லாததாலும் போக்குவரத்து நெரிசலில் திருத்துறைப்பூண்டி பிதுங்கி விழிகிறது. போக்குவரத்தை நெறிமுறைப்படுத்த வேண்டிய போக்குவரத்து காவல் பிரிவில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இருக்க வேண்டும். ஆனால் 4 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்திலும் போலீசார் பற்றாக்குறையாக உள்ளது. இது நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது.

வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் நகரத்திற்கு வந்து செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் கண்ட இடத்திலும் வாகனத்தை நிறுத்துபவர்களுக்கும், ஒழுங்குமுறை மீறி ஓட்டுபவர்களுக்கும் அபராதக் கட்டணம் வெறும் நூறு ரூபாயிலிருந்து மாற்றி அதிகபட்சமாக விதிக்க வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்காளை நகரம் முழுவதும் வர்த்தக சங்கம் மூலம் வைத்து தருகிறோம் என்று காவல்துறையிடம் 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் காவல்துறை இதை பயன்படுத்திக் கொள்ளாததால் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க முடிவதில்லை. மேலும் தமிழக அரசு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து தொடங்கி முடித்தால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்றார். ஆட்டோ ஓட்டுனர் ராமச்சந்திரன்: திருத்துறைப்பூண்டியில் ஒரே சாலைதான் உள்ளது. இதில்தான் வாகனங்கள் போகவேண்டும்.

பொதுமக்கள் நடந்து போக வேண்டும். திருத்துறைப்பூண்டியில் புறவழி சாலை இல்லாததால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை, மாலை நேரங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கால்நடைகள் வேறு கற்றி திரிகிறது. இதனால் பொதுமக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதனை கருத்தில் கொண்டு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிசலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை போக்க புறவழி சாலை பணியை விரைந்து நிறைவேற்றிட வேண்டும். எனவே போக்குவரத்து நெரிசலை போக்க மீண்டும் புதிய திட்ட மதிப்பீட்டின்படி நிதி ஒதுக்கீடு செய்து புறவழி சாலை பணியை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்றார்.

Related Stories: