குடிநீர் குழாய் உடைப்பால் நெடுஞ்சாலையில் பள்ளம்: கம்பத்தில் விபத்து ஏற்படும் அபாயம்

கம்பம்: குழாய் உடைப்பால் கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே  நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன் குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் தண்ணீரை தடுப்பணைகட்டி தடுத்து நிறுத்தி, நீரேற்று நிலையம் மூலம் ராட்சத தொட்டிகளில் தேக்கிவைத்து, சுத்திகரிக்கப்பட்டு பின்னர் லோயர் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கூடலூர், கம்பம், புதுப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் கொண்டுசெல்லும் மெயின்குழாய்கள் பெரும்பாலான இடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வழியாக கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்க முன் கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில், காமயகவுண்டன் பட்டி, சுருளிப்பட்டி பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. பின்னர் குடிநீர் வடிகால் வாரியம் குழாய் உடைப்பை சரிசெய்து பள்ளத்தை மூடினர். இந்நிலையில், நேற்று குழாய் உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளத்தினால் விபத்து ஏற்படாதிருக்க அப்பகுதியில் உள்ள சிலர் அப்பள்ளத்தில் மரக்கிளையை ஒடித்து நிறுத்தி வைத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இப்பாதையில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தை உடனடியாக மூட குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த மணிவாசகன் கூறுகையில், ``கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடைந்த குழாயை சரிசெய்து பள்ளத்தை மூடினர். மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிக போக்குவரத்துள்ள இப்பகுதியில் இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே,உடனடியாக இப்பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>