×

சேதுபாவாசத்திரம் அரசு கல்லூரி அருகே மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அரசு கல்லூரி அருகே மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மேம்பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள முடச்சிக்காடு சமத்துவபுரம் அருகே பேராவூரணி அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. முடச்சிக்காடு பேராவூரணி சாலையில் அரசு கல்லூரி அருகே சாலையின் குறுக்கே காட்டாறு செல்கிறது. இந்த காட்டாற்றில் தண்ணீர் செல்ல பல ஆண்டுகளாக தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த சாலையை பயன்படுத்தி வந்த ஊமத்தநாடு, உடையநாடு, கைவனவயல், வீரியங்கோட்டை, முடச்சிக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, போக்குவரத்து துண்டிக்கப்படும். ஆனால் தற்போது அரசு கல்லூரியும் அமைந்துள்ளது. அதனால் கல்லூரி மாணவ, மாணவியரின் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. பல்வேறு ஆண்டுகளாக இந்த பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. அதேசமயம் இந்த ஆண்டு கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையால் தரைப்பாலத்தில் வெள்ளபெருக்கெடுப்பதால், பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரது போக்குவரத்தும் முழுமையாக தடைபட்டது. எனவே இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Floods ,ground bridge ,monsoons ,Government College ,Sethupavasathiram , Floods on the ground bridge during the rainy season near Sethupavasathiram Government College: Demand for construction of flyover
× RELATED உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கி...