×

அரிமளம், திருமயம் பகுதியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள்: “குடி” மகன்களால் மக்கள், விவசாயிகள் அச்சம்

திருமயம்: அரிமளம், திருமயம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள், சாலையோரங்கள் மதுபாட்டில்கள் அதிகளவில் உடைந்து கிடக்கிறது. இதனால் மக்கள், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையோரம், பள்ளி, குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இருந்தபோதிலும் அரிமளம், திருமயம் பகுதியில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் இன்றளவும் சர்ச்சைக்குரிய இடங்களிலேயே செயல்பட்டு வருகிறது. அவ்வாறு இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பள்ளி, கடைவீதி பகுதிகளில் மது குடித்து விட்டு அநாகரிகமான செய்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருபுறம் இருக்க, அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் போதுமான இடவசதிகளுடன் பார் இல்லாததால் திறந்த வெளியில் மது குடிக்க செல்கின்றனர். இதில் பெரும்பாலான குடிமகன்கள் மது குடிக்க தேர்ந்தெடுப்பது சாலையோர பகுதி, பள்ளி, கோயில் வளாகம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகள், கொல்லை பகுதிகள், காட்டு பகுதிகளாக இருக்கிறது.

அப்பகுதிகளில் நண்பர்களுடன் மது குடிப்பவர்கள் தாங்கள் மது குடிக்க பயன்படுத்திய பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், கப்புகள், வாட்டர் பாக்கெட்டுகளை அங்கேயே விட்டு விட்டு செல்கின்றனர். இவைகள் காற்றில் அப்பகுதி முழுவதும் பறந்து நீர்வரத்து வாரிகளை அடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. தற்போது அரசு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ள போதிலும் ஏற்கனவே விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அரிமளம், திருமயம் பகுதியில் பரவி கிடப்பதை காண முடிகிறது. மேலும் இதுபோன்ற காலி மதுபாட்டில்கள் அப்பகுதியில் நடமாடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது சிறுவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் உருவாக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஒரு சிலர் மதுவை குடித்து விட்டு காலியான கண்ணாடி பாட்டில்களை சாலையின் நடுவில், நீர்நிலைகள், ஊரணி படிகட்டுகள், விவசாய நிலங்கள், பஸ் ஸ்டாப் பகுதிகளில் உடைத்து எறிவதால் அப்பகுதிகளில் குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனிடையே விவசாய நிலங்கள், நீர்நிலை பகுதிகளில் உடைத்தெறியப்பட்ட பாட்டில்கள் மணலில் புதைந்து போவதால் விவசாய பணிகள் மேற்கொள்ளும்போது மணலில் புதைந்த பாட்டில்கள் விவசாயிகள் உடலில் வெட்டி காயத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண்ணாடி பாட்டில்களில் மது அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைப்பது கடினம். அப்படியே உடைத்தாலும் கண்ணாடி பாட்டில்கள் போல் சிதறுவதில்லை. இதனால் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மாசுபடுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Arimalam ,Water bodies ,lands ,Thirumayam ,sons , Water bodies in Arimalam, Thirumayam area, broken bottles in agricultural lands: People and farmers fear by “drinking” sons
× RELATED அரிமளம் அருகே விபத்து மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி