தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளோம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

கோவை: ‘தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்று கோவையில் முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் ரேஸ்கோர்சில் விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதனைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் கோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திறந்த வேனில் பிரசாரத்தை துவக்கினார்.  அப்போது அவர் பேசியதாவது:கோவை மாநகரம் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொழில் துறையில் வளர்ச்சியை கண்டுள்ளது. தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் 74 தொழில்கள் ஈர்க்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களை காப்பாற்றுவது இந்த அரசின் நோக்கம். அந்த வகையில், கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். கலந்துரையாடல்: தொடர்ந்து அவர் செல்வபுரம், குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் பிரசாரம் செய்தார். போத்தனூர் தனியார் மண்டபத்தில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள நிதி ரூ.6 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றார். இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், குனியமுத்தூர்  பகுதிகளில் முதல்வர் பிரசாரம் செய்தார்.

Related Stories: