வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கைது

சென்னை: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, சிஐடியு, தொமுச, எச்எம்எஸ் உள்ளிட்ட  தொழிற்சங்கங்கள், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் சார்பாக,  டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரியும் நேற்று காலை சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயிகள்  போராட்ட குழுவின் தமிழ்நாடு  ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியுவை சேர்ந்த அ.சவுந்தர்ராஜன், தொமுச பொருளாளர் நடராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

கே.பாலகிருஷ்னண் பேசுகையில் ‘‘26ம் தேதி நடைபெறும் குடியரசு தினத்தன்று லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் 10 லட்சம் விவசாயிகள் டெல்லியில் நுழைய உள்ளனர். தமிழகத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர், மாட்டு வண்டி, பைக் பேரணி போன்றவை அம்பானி, அதானிக்கு எதிராக நடத்தப்படும்’’ என்றார். தொமுச பொருளாளர் நடராஜன் பேசும்போது, ‘‘தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் முழுமையாக கலந்துகொள்கிறது’’ என்றார். சிஐடி சவுந்ததரராஜன் பேசும்போது  ‘‘வரும் 26ம் தேதி விவசாயத்துக்கு ஆதரவாக தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை  தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

பின்னர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட, ஊர்வலமாக புறப்பட்ட  போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனம் மற்றும் மாநகர பேருந்துகளில் ஏற்றி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு கொண்டு சென்றனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தப்பு அடித்தும், பாட்டு பாடியபடியும் கலந்து கொண்டனர்.

Related Stories: